12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வேதியியல் பாடத்தில் குழப்பமாகக் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வேதியியல் பொதுத் தேர்வு மார்ச் 11ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேர்வு எளிமையாக இருந்ததாக பொதுவாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் சில கேள்விகளில் பாடத்திட்டத்திலேயே இல்லாத மற்றும் முழுமையாக இல்லாத வகையில், 8 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
இத்தகைய குழப்பமான கேள்விகள், 8 மதிப்பெண்களுக்குக் கேட்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். கேள்விக்கு பதில் அளித்த மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்னென்ன கேள்விகள்?
வேதியியல் பாடத்துக்கான பொதுத் தேர்வில் 'அணைவு சேர்மங்கள்' என்ற 5வது பாடத்தில் இருந்து, ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. 3 மதிப்பெண்கள் பகுதியில் 33வதாக இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. எனினும் இத்தகைய கேள்வி, அணைவு சேர்மங்கள் பாடத்தில் ஏற்கெனவே கேட்கப்படவில்லை. எனினும் கட்டாயம் இந்தக் கேள்விக்கு விடையளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
5 மதிப்பெண் பகுதியிலும் குழப்பமான கேள்வி
3 மதிப்பெண் கேள்வியைப் போல 5 மதிப்பெண் பகுதியிலும் வேதியியல் பாடத்தில் குழப்பமான கேள்வி கேட்கப்பட்டிருந்தது. குறிப்பாக 38வது கேள்வியில் 'ஆ' பிரிவில் 'நைட்ரஜன் சேர்மங்கள்' என்ற 13வது பாடத்தில் இருந்து இடம் பெற்றுள்ளது. ஆனாலும் அந்த கேள்வி முழுமை பெறாமல் உள்ளது. இத்தகைய கேள்விகளால் தேர்வை எழுதிய மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
மன உளைச்சலையே ஏற்படுத்தும்
இதுகுறித்துப் பெயர் வெளியிட விரும்பாத முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஏபிபி நாடுவிடம் கூறும்போது, ‘’பாடத்திட்டத்தைத் தாண்டியும் முழுமை பெறாத வகையிலும் வேதியியல் தேர்வில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இத்தகைய கேள்விகள் சரியாக இருக்கலாம்.
ஆனால், பள்ளி மாணவர்களுக்குப் பொதுத் தேர்வில் இத்தகைய கேள்விகள் கேட்கப்படுவது அவர்களுக்கு மன உளைச்சலையே ஏற்படுத்தும். எனவே இந்த கேள்விகளுக்கு விடை எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் முழு மதிப்பெண்களை அரசு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.