தருமபுரி அருகே பத்து வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, வெளியில் சொல்லிவிடுவான் அச்சமடைந்து, கிணற்றில் தள்ளி கொலை செய்த, 12-ம் வகுப்பு மாணவனை காவல் துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

சிறுவன் காணவில்லை


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மிட்டா ரெட்டி ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு திருமணமாகி, பல ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், 10 சிறுவன் அரசு துவக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். மேலும், பங்குனி உத்திரத்திற்காக பழனிக்கு செல்வதற்கு சிறுவன் மாலை அணிந்து இருந்துள்ளான். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி முதல் சிறுவனை காணவில்லை எனவும் மாலை 4 மணி அளவில் சிறுவன் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பகல் 12 மணிக்கு பள்ளியில் இருந்த மாணவனை அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர்  அழைத்துச் சென்றதாக பார்த்த சிலர் கூறியுள்ளனர். மேலும் மாலை வரை சிறுவன் கிடைக்காததால், பெற்றோர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

 

மேலும், சிறுவனின் புகைப்படத்தை வாட்ஸ் அப், முகநூலில் பதிவிட்டு காணவில்லை என தகவல் பரப்பியுள்ளனர். இதனை அடுத்து அதியமான்கோட்டை காவல் துறையினர் மிட்டாரெட்டி அள்ளி கிராமத்திற்கு சென்று 12-ம் வகுப்பு மாணவன் மற்றும் கிராமத்தில் விசாரணையை தொடங்கினர். அப்பொழுது 12-ம் வகுப்பு மாணவனை அழைத்துக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை  ஆய்வு செய்தனர். அதில் சிறுவன், 12-ம் வகுப்பு மாணவனுடன் சென்றது பதிவாகி இருந்தது. தொடர்ந்து மீண்டும் சிறுவன் இல்லாமல், மாணவன் மட்டும் தனியாக வந்ததும் பதிவாகி இருந்தது.

 

பாலியல் தொல்லை


தொடர்ந்து காவல் துறையினர் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் என்பது தெரியவந்தது. மாணவன், அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் இரவு 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் திரண்டனர். மேலும் சிறுவனுக்கு என்ன ஆனது என கிராம மக்கள் ஒன்று சேர்ந்து காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து வந்த தருமபுரி டிஎஸ்பி சிவராமன், இரவு 10 மணி அளவில் பிடிபட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அருகில் உள்ள ஊர் தலைவரின் விவசாய கிணற்றில் சிறுவனை தள்ளி விட்டு வந்ததாக, தெரிவித்துள்ளார். 

கொலை


மேலும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை செய்து, அதை வெளியே சொல்லிவிடுவான் என  பயந்து கொண்டு அந்த சிறுவனை கிணற்றில் தள்ளி விட்டு வந்ததாக விசாரணையில் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.  இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் மற்றும் காவல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விவசாய கிணற்றுக்கு சென்று இரவு 12 மணி அளவில் தேடும் பணியில் ஈடுபட்டு சிறுவனின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மாணவன் ஒருவர் மட்டுமே இந்த சம்பவத்தை செய்திருக்க முடியாது. இதற்கு உடந்தையாக சிலர் இருப்பார்கள் உரிய விசாரணை செய்து, அவர்களையும் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் முழு விவரம் தெரியும் வரை சிறுவனின் உடலை வாங்க மாட்டோம் என காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.