டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அந்த மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ்சிசோடியா கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது முதல் அந்த வழக்கு பரப்பாகவே காணப்படுகிறது. இந்த நிலையில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
மணீஷ்சிசோடியா கைது:
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது. தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக டெல்லி துணை முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், இது தொடர்பாக மார்ச் 7ஆம் தேதி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவரை காவலில் எடுத்தது. அமலாக்கத்துறையின் காவல் முடிவுக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் சிசோடியாவின் காவலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமின் மறுப்பு:
சிசோடியாவை ஏப்ரல் 5 ஆம் தேதி வரை சிறையில் வைக்க சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் உத்தரவு பிறப்பித்திருந்தார். இது தொடர்பாக, அமலாக்கத்துறை அவரை 7 நாட்கள் விசாரித்து வந்தது. இதையடுத்து, சிபிஐ தொடுத்த வழக்கில் ஜாமின் கோரி அவர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சிசோடியாவுக்கு ஜாமின் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ, "அவர் அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவர் வழக்கு தொடர்பான ஆதாரங்களை எளிதில் மறைக்க முடியாது. ஆனால், அழிக்க முடியும்" என வாதிட்டது. பின் ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அதனை தொடர்ந்து மே 4 ஆம் தேதி டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் அமலாக்க இயக்குனரகம் (ED) புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையில் சிசோடியாவை முக்கிய குற்றவாளி என அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
முதலில் அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக பதிவு செய்த வழக்கில் ஜாமின் கேட்டிருந்த நிலையில் அதனை தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல் மணீஷ் சிசோடியாவுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் சாட்சிகள் கலைக்க வாய்ப்புள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.