2024- 25ஆம் கல்வியாண்டில் 11, 12ஆம் வகுப்பை முடித்த பள்ளி மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழை இன்று (ஆக.7) முதல் பெறலாம். எங்கே? எப்படி? இதோ காணலாம்.
கடந்த மாதம் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் இன்று (07.08.2025) முதல் வழங்கப்படுகிறது. மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவு உட்பட அனைத்து மாணவர்களுக்கும் இன்று மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
பெறுவது எப்படி?
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ( Original Mark Certificates) மற்றும் மதிப்பெண் பட்டியலை (Statement Of Marks) பெற்றுக்கொள்ளலாம்.
அதே நேரத்தில் தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற முடியும் என்று அரசுத் தேர்வுகள் மையம் தெரிவித்துள்ளது.
மேலும், விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் மே 8ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டன. அதன்படி, தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேரும் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.