தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.




திண்டுக்கல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்ற விவரம்


அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் தேர்வு எழுதிய 24665 பேரில், 10818  மாணவர்களும், 11952  மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் சதவீதமாக 89.42 சதவீதம் மாணவர்களும், 95.11 சதவீத மாணவிகளும் என மொத்தம் 92.32 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருட தேர்வு முடிவில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் பத்தாம்  வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்.




முதலிடம் பிடித்த பத்தாம் வகுப்பு மாணவி


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரோட்டு புதுரை சேர்ந்தவர் விவசாயி கருப்புசாமி. இவரது மனைவி ரஞ்சிதம். இவர்களது மகள் காவிய ஸ்ரீயா ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கொசவபட்டி அக்ஷயா அகாடமி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுதி இருந்தார். இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 499 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தின் முதல் இடம் பிடித்தார்.




இதுகுறித்து மாணவி பேசியபோது, “எங்களது குடும்பம் விவசாய குடும்பம். எனது தாய், தந்தையர் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்து வருகின்றனர். அதேபோல் ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர்.  ஆசிரியர்கள், பெற்றோர் உறுதுணையால் தற்போது அதிக மதிப்பெண் எடுக்க முடிந்தது. எனது லட்சியம் ஐஏஎஸ் ஆக வெற்றி பெறுவது. விவசாய குடும்பத்தில் இருந்து படித்து தற்போது வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார். மாணவியின் தாயார் ரஞ்சிதம் செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஒட்டன்சத்திரம் ரோட்டுப்புதூரில் குடியிருந்து வருகிறோம். நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எங்களின் மகள் காவிய ஸ்ரீயா பத்தாம் வகுப்பில் 499 மதிப்பெண்கள் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல் அவர் உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் விவசாய குடும்பத்தில் இருந்து தமிழகத்தில் முதல் இடம் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  எனது மகளின் லட்சியமான ஐஏஎஸ் படிப்பதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்று கூறினார்.