தமிழ்நாடு முழுவதும் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சேப்பாக்கம் லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். 


கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தக் கல்வியாண்டில் நிலைமை சரியாகி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இன்று (ஏப்ரல் 6) பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று மொழிப் பாடத் தேர்வு, மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. 


இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில்  4,66,765 மாணவர்களும், 4,55,960 மாணவிகளும் என மொத்தம் 9, 22, 725 பேர் எழுதுகின்றனர். இதேபோல் புதுச்சேரியில் 7,911 மாணவர்களும், மாணவிகள் 7,655 பேரும் என மொத்தம் 15, 566 பேர் எழுதுகின்றனர். அதேபோல தனித்தேர்வர்கள் பிரிவில் மாணவர்கள் 26,352 பேரும், மாணவிகள் 11, 441 பேரும், 5 திருநங்கைகள் என மொத்தம் 37,798 பேர் தேர்வு எழுதுகின்றனர். 


அத்துடன்  264  சிறைக் கைதிகளும், மாற்றுத் திறனாளிகள் 13,151 பேரும் எழுதுகின்றனர். மொத்தமாக நடப்பாண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,76,089 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 4,025 மையங்களில் 12,639 தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



செய்முறைத் தேர்வுக்குக் கால அவகாசம் நீட்டிப்பு


முன்னதாக 10ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் அதிக அளவில் மாணவர்கள் வராத நிலையில், அவர்கள் தேர்வை எழுதுவதற்காக மார்ச் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அதேபோல 12ஆம் வகுப்பு மொழிப் பாடத் தேர்வுகள் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடத் தேர்வுகளை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை. இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதுபோன்ற ஆப்சென்ட் நிகழ்வுகள் 10ஆம் வகுப்பில் ஏற்படாமல் இருக்கப் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


10.15 மணிக்குத் தொடங்கிய தேர்வு


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள்  காலை 10 மணிக்கு உள்ளே செல்ல வேண்டும். 10 மணிக்கு புகைப்படம், பதிவெண்,  பாடம் முதலான விவரங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்படும். இவற்றை சரிபார்த்த பின் 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும். இந்த தேர்வு காலை 10.15 முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. 


இதையடுத்து பள்ளிகளில் தேர்வு எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் கண்காணிக்கும் வகையில், அமைச்சர்  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சேப்பாக்கம் லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். 




அங்குள்ள தேர்வு மையத்தை பார்வையிட்டு மாணவிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் கல்வி அறக்கட்டளை சார்பாக மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினார்.