அக்டோபர் 31ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பெறுவது எப்படி?
தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஜூன் 20ஆம் தேதி அன்று வெளியிட்டார்.
12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 தேர்வு எழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.67 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்
நடப்பாண்டில் 10ஆம் வகுப்பில், மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேரும், மாணவிகள் மொத்தம் 4 லட்சத்த 60 ஆயிரத்து 120 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 1 நபரும் தேர்வு எழுதினர். 10ம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது 90.07 சதவீதம் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
மதிப்பெண் சான்றிதழ்
11 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்.15ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கிடையில் 10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வுகளை எழுத மாணவர்கள் ஜூலை 4ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.
12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் தேர்வை எழுதாத மாணவர்களுக்கும் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற்றது. 10-ம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 8 வரை துணைத் தேர்வுகள் நடைபெற்றது.
இந்நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு http://dge.tn.gov.in இணையதளத்தை அணுகலாம்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள், துணைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.