10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம் பல்வேறு விதிமுறைகள், கடமைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது.
இதில் தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக, அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல தனியார் பள்ளி முதல்வர்களும் தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக பணியாற்றக் கூடாது, அதேபோல ஒழுங்கீனச் செயலின் தன்மையும் மற்றும் அது சார்ந்து கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளும் பற்றிக் கூறப்பட்டுள்ளன.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு அவர்கள் புரியும் குற்றத்திற்கு ஏற்ப தண்டனைகள் அளிக்கப்படுவதால் புரிந்துள்ள குற்றம் குறித்து தெளிவாக அறிக்கை அனுப்புதல் வேண்டும்.
- துண்டுத்தாள் வைத்திருத்தல்:
தேர்வர்கள் துண்டுத்தாள் / அச்சடித்த குறிப்புகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்படும்போது, அன்னார் துண்டுத்தாள் மட்டுமே வைத்து இருந்தாரா அல்லது அதைப் பார்த்து விடைத்தாளில் விடைகள் எழுதினாரா என்பதையும்தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தேர்வர் வாக்குமூலத்திலும், அறைக் கண்காணிப்பாளர் வாக்குமூலத்திலும், மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் அறிக்கையிலும், இதனை தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும்.
துண்டுத்தாளில் பதிவெண் குறிப்பிட்டுத் தேர்வரின் கையொப்பம் பெறுதல் வேண்டும்.
- துண்டுத்தாள் வைத்திருந்து அதை பார்த்துத் தேர்வெழுதும்போது பிடிபடுதல்:
தேர்வர்கள் துண்டுத்தாள் அல்லது அச்சடித்தக் குறிப்புகள் வைத்திருந்து அதை பார்த்து எழுதும்போது பிடிபட்டிருந்தால் தேர்வர் துண்டுத்தாள்களை பார்த்து விடைகளை விடைத்தாளில் எழுதும்போது பிடிக்கப்பட்டார் என தெளிவாக அறிக்கையில் குறிப்பிட வேண்டும். தேர்வர் துண்டுத்தாளிலிருந்து விடைத்தாளில் எழுதிய பகுதியை விடைத்தாளிலும், துண்டுத்தாளிலும் பச்சை / சிகப்பு நிற மையினால் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். தோவர் மற்றும் அறைக் கண்காணிப்பாளர் வாக்குமூலத்திலும் துண்டுத்தாளை பார்த்து விடைகள் எழுதும்போது பிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட வேண்டும்.
- விடைத்தாள் பரிமாற்றம் செய்து ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுதல்:
விடைத்தாள் பரிமாற்றம் செய்து ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவது கடுங்குற்றமாகும். தேர்வர்களுக்குள் விடைத்தாள் பரிமாற்றம் செய்து தேர்வர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும்போது பிடிக்கப்பட்டால் எந்தத் தேர்வரின் விடைத்தாள் மாற்றம், எந்தத் தோர்வரிடம் இருந்தது எனத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மாற்று விடைத்தாள் கொண்டு தோ்வெழுதியபோது கண்டுபிடிக்கப்பட்ட தேர்வரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டு அறைக்கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும். முதன்மைக் கண்காணிப்பாளரும், துறை அலுவலரும் மேலொப்பம் இட வேண்டும்.
- ஆள்மாறாட்டம்:
ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதும் ஒழுங்கீனச் செயல்கள் கண்டுபிடிக்கப்படும்போது காவல்துறையினருக்கு உடனடியாக புகார் தெரிவித்து வழக்கு பதிவு செய்து அரசுத் தோவுத் துறைக்கு முதல் தகவல் அறிக்கையின் நகலினை இணை இயக்குநர் மேல்நிலை / பணியாளர் அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்வரின் பதிவெண், பெயர், வீட்டு முகவரி, ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதியவர் பெயர், வீட்டு முகவரி போன்ற தகவல்களுடன் விரிவான அறிக்கை அனுப்ப வேண்டும்.
- தேர்வர் இதர ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும்போது, அவர்கள் ஈடுபட்ட ஒழுங்கீனச் செயல்கள் குறித்து விவரமாக அறிக்கை அனுப்புதல் வேண்டும்.
- தேர்வு மையத்தில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்ட தேர்வர்கள் குறித்து அறிவிக்கப்பட வேண்டும்.
இவ்வறிக்கையின் ஒரு நகலை பள்ளியில் வைத்துக் கொண்டு, ஒரு நகலை மற்ற ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். பறக்கும் படையினர்களால் கண்டுபிடிக்கப்படும் போது ஒரு நகல் பறக்கும் படையினருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
- தேர்வர்களின் வாக்குமூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இருப்பின் (குறிப்பாக மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகள்) அதற்கான மொழி மாற்றம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரால் மேலொப்பமிட்டு சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.