பத்தாம் வகுப்பு & மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு, ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:
நடைபெறவுள்ள ஜூலை 2025, பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுத, விண்ணப்பித்தத் தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 25.06.2025 (புதன் கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?
- தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று HALL TICKET என்ற வாசகத்தினை க்ளிக் செய்தால் ஒரு பக்கம் தோன்றும்.
- அதில் பக்கத்தில் உள்ள “SSLC & HSE FIRST YEAR SUPPLEMENTARY EXAM, JULY 2025 - HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை க்ளிக் செய்யுங்கள்.
- அதில் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவுசெய்ய வேண்டும்.
- அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.
- உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 26.06.2025 (வியாழக்கிழமை) முதல் 28.06.2025 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத்தேர்வு நடைபெற உள்ளது.
ஹால் டிக்கெட் கட்டாயம்
மேலும், இத்தேர்வர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஜூலை 2025, பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.