நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்த தூய்மைப் பணியாளரின் மகன் ரூ.8 லட்சம் கட்டணம் செலுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜோதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் அசோக்குமார் (22), இவர், கடந்த 2022-ஆம் ஆண்டு கதிரிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிப்பை முடித்தார்.

மருத்துவராக வேண்டும் என்ற இலக்குடன் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த அசோக்குமார் கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 347 மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் 430 மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் வினாத்தாள் கசிவு காரணமாக அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.

Continues below advertisement

இதையடுத்து, 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் மீண்டும் நீட் தேர்வு எழுதிய அசோக்குமார், 338 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் தட்சசீலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பதற்கான இடம் அவருக்குக் கிடைத்துள்ளது.

தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த தகவலை தெரிவிப்பதற்காக கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் குழந்தைசாமியை மாணவர் அசோக்குமார் சந்தித்தார். அப்போது மாணவருக்கு இனிப்பு வழங்கி அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், கல்லூரியில் சேர்வதற்காக வரும் திங்கட்கிழமைக்குள் சுமார் ரூ.8 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் கிடைத்துள்ள இடத்தை இழக்க நேரிடும் என்றும் அசோக்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாணவர் அசோக்குமார் கூறுகையில், ”மூன்று முறை நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். தற்போது தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால் அதற்கான ரூ.8 லட்சம் கட்டணத்தைச் செலுத்தும் அளவுக்கு எனது குடும்பத்தில் பொருளாதார வசதி இல்லை. எனது தந்தை தூய்மை பணியாளராக வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். எனவே, எனது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் எனது மருத்துவக் கல்வியைத் தொடர உதவ வேண்டும். மருத்துவராகி படிப்பை முடித்த பிறகு, எனது ஊர் மக்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் இலவசமாக மருத்துவச் சேவை வழங்குவேன்” என கூறினார்.