சென்னையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த பாடகர் கிருஷ்ணராஜின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Continues below advertisement

தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில், 1990-களில் பல வெற்றிப் பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ். ‘பொற்காலம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ பாடல் மூலம் மிகவும் பிரபலமான இவர், ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘காத்தடிக்குது காத்தடிக்குது’, ‘அய்யய்யோ’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ பாடலுக்காகத் தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகர் விருதையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கிருஷ்ணராஜ் உடல்நலக் குறைவால் நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் கிருஷ்ணராஜின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக இரங்கல் தெரிவித்திருந்தார்.

Continues below advertisement

இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான சேலம் மாவட்டம், வேம்படிதாளத்திற்குக் கொண்டுவரப்பட்டு, கிருஷ்ணராஜன் பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவர் புகழ்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ பாடல் ஒலிக்க, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, வேம்படிதாளம் பகுதியில் உள்ள மயானத்தில், அவர்களது குடும்ப‌ வழக்கப்படி இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அவரது முதல் மகள் ஜீவ ரேகா அமெரிக்காவில் உள்ளதால் தன்னுடைய தந்தை இறுதி ஊர்வலத்தை வீடியோ கால் மூலம் பார்த்தார். இறுதி ஊர்வலத்தில் அவரது அண்ணன் மகன் பாலச்சந்தர், பாடகர் கிருஷ்ணராஜ் பாடிய பாடல்களை இறுதி ஊர்வலத்தில் பாடியபடி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, பாடகர் கிருஷ்ணராஜன் உடல் அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.