திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் செயல்படும் தனியார் பள்ளி மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் (Special Classes) நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. விதிகளை மீறி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்துவதாகப் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பனந்தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்சி பள்ளிகள் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் வழக்கமாக பள்ளி செயல்பட்டு வருகின்றன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கனமழை என்றும் பாராமல் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாகக் கனமழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு சிறப்பு வகுப்புகள் மற்றும் பள்ளிகள் செயல்படக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கும் நிலையில், திருப்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்டு பள்ளிகளை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
