திருவாரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் குறைபாடு இருப்பதாகவும் ஆசிரியர்கள் செல்போனில் மூழ்கி விடுவதாகவும் ஆய்வில் தகவல்.

 

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் நடத்திய ஆய்வில் பல்வேறு குறைபாடுகள் கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்கள் செய்வதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்களுக்கு என்ன குறைபாடுகள் இருக்கிறது என்பது குறித்து சுற்றறிக்கை அனுப்பி தலைமையாசிரியர்கள் அதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக ஆசிரியர்கள் பாடக்குறிப்பில் ஒன்றும் பாடம் கற்பிப்பது ஒன்றுமாக உள்ளது. பொறுத்தமில்லாத கற்பித்தல் உபகரணங்கள் இல்லாமல் பாடப்புத்தகத்தை படித்து பாடம் நடத்துகிறார்கள். ஒரே இடத்தில் நின்று கொண்டே பாடம் நடத்துதல். சில ஆசிரியர்கள் பாட போதனை நேரத்தில் தேர்வு நடத்துவதும் அப்போது நாற்காலியில் அமர்ந்து கைபேசியில் மூழ்கிவிடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. பாட போதனையின் போது மாணவர்கள் கருத்தை உள்வாங்கினார்களா என அறியாது புத்தகத்தை வாசித்து காட்டுகிறார்கள்.



 

மேலும், பாடபோதனையின் போது கற்றல் விளைவுகள் நிகழாமலேயே அல்லது கற்றல் விளைவுகளை சோதிக்காமலேயே வகுப்பறை முடிகிறது. சில ஆசிரியர்கள் புத்தகம் ஒன்றைத் தவிர வேறு எந்த உபகரணங்களையும் பயன்படுத்துவது இல்லை. பாடக்குறிப்பேடுகள் மாதக்கணக்கில் மதிப்பீடு செய்யப்படாமலே உள்ளன. கட்டுரை நோட்டுக்கள் ஆசிரியர் எழுதி, மாணவர்கள் அதை பார்த்து எழுதுவதாகவே இருக்கின்றன. மாணவர்கள் சுயமாக முயற்சி செய்வதாக தெரிவில்லை. கையெழுத்துப் பயிற்சி குறிப்பேடுகள் உரியவாறு மதிப்பீடு செய்யாமல் இருப்பது, மதிப்பீடு செய்த குறிப்பேடுகளில் கையொப்பத்துடன் தேதி குறிப்பிடப்படவில்லை. பாடம் கற்பிக்கும் முன் போதிய அல்லது பொருத்தமான ஆயத்தப்படுத்துதல் இல்லை. நேரடியாக பாடம் நடத்துவது, வகுப்பறை சூழல் என்பது அந்த பாடவேளையை உணர்த்தும் விதமாக இல்லை. உதராணமாக அறிவியல் கற்பிக்க தொடங்கினால் அறிவியல் கற்றல் உபகரணங்கள் அது சார்ந்து மாணவர்கள் எதிர்பார்க்கும் புதிய கற்றல் உத்திகள் இருப்பதாக தெரியவில்லை. பாடவேளை மாற்றம் நிகழும் போது ஆசிரியர்கள் உரிய நேரத்தில் வகுப்பறைக்கு செல்லாததால் வகுப்பறையில் மாணவர்களிடையே பல விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இதில் தொடர்புடைய பாட ஆசிரியர்கள் தலைமையாசிரியர் உரிய தனிக்கவனம் செலுத்திட வேண்டும்.



 

மேலும் தலைமையாசிரியர்கள் தங்களது பள்ளிப் பார்வை செயலி மூலம் மிக குறைவாக கூர்ந்தாய்வு செய்தது, பாடக்குறிப்பேட்டில் தொடர்புடைய பாடத்தின் கற்றல் விளைவுகள் எழுதப்படாமலே மிகவும் சுருக்கமாக எழுதப்பட்டிருக்கின்றன. பல்வேறு குறைபாடுகளை இந்த சுற்றறிக்கையில் முதன்மை கல்வி அலுவலர் சுட்டிக்காட்டி இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்கப்பட்டிருக்கும் பயிற்சியின் படியும் பாடம் கற்பித்திடுமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் தலைமயாசிரியர்கள் இதில் தனிகவனம் செலுத்தி கண்காணித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அந்த சுற்றறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.