நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து வகுப்புகள் நடந்து வருகின்றனது. மேலும் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் வகுப்புகளை நடத்தலாம் எனவும் தமிழக  அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


 

இந்நிலையில் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும், பள்ளிக்கு வந்தவுடன் மாணவர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து செயல்பட வேண்டும், மேலும் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் உணவினை பரிமாறிக் கொள்ளக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தன. அதனையும் மீறி பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு என்பது ஏற்பட்டு வந்தன. திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 23 மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் எந்தெந்த பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதோ அந்த பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தொற்றுக்கான பரிசோதனை என்பது சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டது.



 

அதனையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இன்னிலையில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளியில் பயின்று வரும் 372 மாணவிகளுக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலமாக எடுக்கப்பட்டது. மேலும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அடுத்த இரண்டு தினங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அடுத்ததாக வருகிற திங்கட்கிழமை முதல் பள்ளி செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.