தேர்வு கட்டண உயர்வால் ஏற்கனவே விரக்தியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் . இந்த வருடம் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்று உறுதிப்படுத்தமுடியாத சூழ்நிலையில் , பல்கலைக்கழகத்தில் இருந்து தேர்வுக்கட்டணத்தை உடனடியாக செலுத்தும்படி வந்திருக்கும் சுற்றறிக்கை மாணவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டுக்கு முன்னர் மெட்ராஸ் யூனிவர்சிடியின் முதுகலை படிப்பிற்கான விரிவாக்க மையமாக செயல்பட்டுக்கொண்டிருந்த வேலூர்  மெட்ராஸ் யூனிவர்சிட்டி கட்டிடம், மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பாலும், நிர்வாக காரணங்களாலும் வேலூர் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2002-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி உருவாக்கப்பட்டது .  




தற்போது வேலூரை அடுத்த சேர்க்காட்டில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 124 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை இதன் உறுப்பு கல்லூரிகளாய் கொண்டுள்ளது. வேலூர்  , திருவண்ணாமலை , விழுப்புரம் , காஞ்சிபுரம் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்லூரிகளில் பொருளாதாரம் , விலங்கியல் , வேதியல் , மானுடவியல், அரசியல் , கணினி உற்பட 33 வகையான துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் தான் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களை தேர்வு கட்டணம் செலுத்தும்படி வந்திருக்க கூடிய சுற்றறிக்கை மாணவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது .    


இது குறித்து நம்மிடம் பேசிய மாணவர் ஒருவர் "கொரோனா நோய் பரவலுக்கு முன்பே , தேர்வு கட்டணங்கள் , ஒரு பாடத்திற்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயர்த்தியது பல்கலைக்கழகம். மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக தேர்வு கட்டண உயர்வு ஒரு பகுதி குறைக்கப்பட்டது. தற்பொழுது இருக்கக்கூடிய ஊரடங்கு சூழ்நிலையில், உடனடியாக தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பல்கலைக்கழக உத்தரவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கூறினார் பெயரை வெளியிட விரும்பாத அந்த மாணவர். இவரை தொடர்ந்து, ABP நாடு செய்தி குழுமத்திற்கு பேட்டி அளித்த தமிழ் நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் செய்யாறு கிளை தலைவர் ஞா சுப்பிரமணியம் "திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் கிராம பகுதிகளை சார்ந்த , விவசாய மற்றும் கூலி தொழில் பின்புலத்தை உடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் .    


இந்த ஊரடங்கு காலத்தில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மாணவர்களின் குடும்பம் போராடி கொண்டு இருக்கும் சூழ்நிலையில், தேர்வு நடக்குமா நடக்காதா என்று உறுதிப்படுத்தாத சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் இருந்து வரும் 10-ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளும் மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தை வசூல் செய்து அதை மொத்தமாக பல்கலைக்கழக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது . 




 சராசரியாக ஒரு மாணவரிடம் இருந்து 1800 முதல் 3500 ருபாய் வரை கட்டணமாக வசூலிக்க சொல்லி சுற்றறிக்கை வந்துள்ளது. இந்தத் தேர்வு கட்டணத்தை மாணவர்கள்  செலுத்தினால் செல்லாது என்றும், அந்தந்த கல்லூரி முதல்வர்கள் தான் மாணவர்களிடம் பணம்  வசூல் செய்து அதனை மொத்தமாக பல்கலைக்கழக வங்கிக்கணக்கில் செலுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளனர் . 


வரும் ஜூன் 10-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் செலுத்தினால் அபராதம் கிடையாது என்றும், ஜூன் 14-ஆம் தேதி வரை அபாரத்துடன் செலுத்தலாம் என்றும் அதன் பின்னர் செலுத்தும் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்திருக்கின்றது. ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் கல்லூரிகளுக்கு நேரில் வர போதிய பேருந்து வசதிகள் இல்லை என்று கூறிய பாலசுப்ரமணியம், தமிழ் நாடு அரசு இதில் உடனடியாக தலையிட்டு தேர்வு கட்டணத்தை  ரத்து செய்து மாணவர்களை நேரடியாக தேர்வுகளில் பங்குபெறச் செய்வதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக கேட்டு கொண்டார்.