CAT 2025 Notification: ஐஐஎம் உள்ளிட்ட மேலாண்மை கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பதற்காக நடத்தப்படும் கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளன.  இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

Continues below advertisement

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிக்க கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து (21) ஐஐஎம்களும் இந்த மதிப்பெண்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. 100க்கும் மேற்பட்ட ஐஐஎம் அல்லாத நிறுவனங்களும் CAT மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன. 

ஆண்டுதோறும் ஐஐஎம்களில் ஒன்று கேட் தேர்வை நடத்தும் நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான தேர்வை ஐஐஎம் கோழிக்கோடு நடத்துகிறது.

Continues below advertisement

இந்தத் தேர்வுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள தேர்வர்கள், செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.    

தேர்வு எப்போது? (CAT 2025 Exam Date)

CAT 2025 தேர்வு நவம்பர் 30ஆம் தேதி, 3 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகள் நவம்பர் 5ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

  • எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
  • மற்ற அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் ரூ.2,600 கட்டணம் ஆகும்.

ஒரு தேர்வர், எத்தனை ஐஐஎம்கள் அல்லது பங்கேற்கும் பிற கல்வி நிறுவனங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். அதற்கு, ஒரு முறை மட்டுமே கட்டணத்தைச் செலுத்தினால் போதும். அதே நேரத்தில் விண்ணப்பக் கட்டணத்தைத் திரும்பப் பெற முடியாது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

CAT இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எனினும் ஒவ்வொரு ஐஐஎம்முக்கும் பிரத்யேக தேர்வு செயல்முறை உள்ளதால், அதைக் கவனத்தில் கொண்டு, விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.

தேர்வு எங்கு நடத்தப்படும்?

இந்தியாவில், சுமார் 170 நகரங்களில் கணினி மூலம் கேட் தேர்வு நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் தேர்வு நடக்கிறது.

தேர்வு முடிவுகள் எப்போது?

2025ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு முடிவுகள் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.iimcal.ac.in/sites/default/files/2025-07/CAT-2025.pdf