வேலைவாய்ப்பு, உதவித் தொகை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பார்வையற்றோர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு செய்தது என்ன என்று அரசு பட்டியலிட்டு உள்ளது.
பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் பிப்.13 முதல் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்பு, உதவித் தொகை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தில் பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கத்தின் உறுப்பினர்களிடம் 17.02.2024 மற்றும் 21.02.2024 ஆகிய நாட்களில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் லக்ஷ்மி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெங்கட பிரியா, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மற்றும் இதர உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சங்கத்தின் சார்பில், அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவிகித இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், அனைத்து துறைகளிலும் சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் பணிநியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளைப் பணி நிரந்தரம் செய்தல், ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளித்தல், ஸ்லெட் மற்றும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடம் வழங்குதல், மாணவர்களுக்கான கல்லூரி கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு விலக்கு அளித்தல், பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குதல், அரசு பணிகளில் பணிபுரியும் மாற்றுத்திறணாளிகளுக்கு ஊர்திப்படி உயர்த்தி வழங்குதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
4% இட ஒதுக்கீடு
குறிப்பாக, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான கோரிக்கை குறித்து அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் மாற்றுத் திறணாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016 பிரிவு 33 மற்றும் 34-ல் தெரிவித்துள்ளபடி, அரசுப்பணி தெரிவிற்காக அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்களாக கண்டறியப்பட்ட பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படும் முறை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தளர்வுகள்:
- அனைத்து அரசுத் தேர்வுகளிலும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயது வரம்பில் 10 ஆண்டுகள் கூடுதலாக வழங்கப்படுகிறது.
- அனைத்து அரசுத் தேர்வுகளிலும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதார்களுக்கு கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் அனைத்து பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளி விண்ணப்பதார்களுக்கும் தேர்வு கட்டணத்திலிருந்து 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது.
- தேர்வு எழுதும் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படு கிறது.
- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்கு எளிதில் வருகைபுரியும் வகையில் அவர்களின் சொந்த மாவட்டத்திலிலேயே தேர்வு மையங்கள் அமைத்து, தரை தளத்திலேயே தேர்வு அறை ஒதுக்கப்படுகிறது.
மேலும், அரசு சிறப்புப் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவும் அரசு சிறப்புப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பு திரும்ப பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து அரசுத் துறைகளிலும் தற்போது மதிப்பெண் அடிப்படையிலான பணிமூப்பு மறுவரையறுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இப்பணியும், மாற்றுத் திறனாளிகளுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதால் மறுவரையறுக்கும் பணி முடிவடைந்த பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசால் அண்மையில் வழங்கப்பட்டுள்ள பிற நலத்திட்ட உதவிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல்இருந்து ரூ.1500/- ஆக ஜனவரி 2023 முதல் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நவீன வாசிக்கும் கருவி உட்பட உயர் தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. (நவீன வாசிக்கும் கருவி, திறன் பேசி கருவிகள், Angel pro daisy Player மற்றும் கைபேசி).
வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.600/-, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.750/- மற்றும் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ. 1000/- வழங்கப்பட்டு வருகிறது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் முதன்மையான கோரிக்கையான அரசு வேலைவாய்ப்பினை அவர்களுக்கு உறுதி செய்யும் வகையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாத பட்டதாரி ஆசிரியர் தேர்வு, 2024 பிப்ரவரி மாதத்தில் 2582 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்க சுமார் 41,000 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 655 மாற்றுத்திறனாளிகள் 117 பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் 151 பார்வை மாற்றுத்திறணாளிகள் 60 பணியிடங்களுக்கு தேர்வு எழுதி உள்ளனர். இதுபோன்று நிரப்பப்படாத காலிப் பணியிடங்களை நிரப்பிட தொடர் நடவடிக்கை இவ்வரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, பார்வையற்றக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வரும் போராட்டத்தினை கைவிடுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.