பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 27.01.2025 அன்று ஒக்கியம் துரைபாக்கம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 22931-வது திறன்மிகு வகுப்பறையினை நிறுவினார்.
இதுகுறித்து இன்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியால் தற்போதைய தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்திற்கு எற்ற வகையில் மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பொருட்டு எண்ணிய தொழில்நுட்ப விரிவாக்கத்தை (Digital Technology) முன்னெடுப்பு நிகழ்வாக கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.
கற்றல், கற்பித்தலில் அடுத்த உச்சம்
புத்தகங்கள் மற்றும் கரும்பலகைகள் வாயிலாக நடைபெற்ற கற்றல், கற்பித்தல் நிகழ்வின் ஓர் உச்சமாக உரைகள், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில் தகவலைப் பெற்று பாடப்பொருள்களை எளிதாகப் புரிந்துகொள்ளவும், பெற்ற தகவல்களைத் தக்கவைத்து கொள்ளவும் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்கவும் 22,931 திறன் மிகு வகுப்பறைகள் ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 11,76,452 மாணவர்கள் பயனடையும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்டமாக அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், சேலம், திருவாரூர் மற்றும் விழுப்பும் ஆகிய மாவட்டங்களில் உள்ள 493 அரசு தொடக்கப் பள்ளிகளில் 634 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் 14.6.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது.
இறுதி கட்டமாக, சென்னை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளில் 27.01.2025 அன்று ஒக்கியம் துரைபாக்கம், அரசு மேல்நிலைப் பள்ளியில்22931வது திறன்மிகு வகுப்பறை பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் நிறுவப்பட்டது. இதை போன்று அரசு பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ. 519.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
குழந்தைகள் நேய வகுப்பறைகள்
இவ்விரு திட்டங்களின் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் 43,89,382 மாணவர்கள் பயனடைய உள்ளனர். இவ்வாறு அரசு பள்ளிகளில் அமைக்கப்பட உள்ள திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக கற்றல் கற்பித்தல் பணியானது எளிமையாகவும், எளிதில் மாணவர்களை கவரக்கூடியதாகவும், பாடப்புத்தகங்களில் உள்ள பாடப்பொருட்கள் மற்றும் அதன் தொடர்புடைய விவரங்களை ஆடியோ மற்றும் வீடியோ வாயிலாக பார்த்தும் கேட்டும் விரைந்து புரிந்துகொள்ளக் கூடியதாகவும் அமைய உள்ளது.
இத்தகைய திறன்மிகு வகுப்பறைகள் குழந்தைகள் நேய வகுப்பறைகளாக மாற்றியமைப்பதன் வாயிலாக ஆசிரியர்கள் இனி வரும் காலங்களில் ஆசிரியர்களாக மட்டுமின்றி ஒரு ஏதுவாளராகவும் செயல்படுவார்கள். இதன் வாயிலாக மாணவர்களின் கற்றல் திறன்கள், கற்றல் விளைவுகளை அடையும் திறன்கள் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது’’
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.