கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை உள்ளதால் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பதை தாமதப் படுத்தலாம் என்று புதுச்சேரி அரசுக்கு அம்மாநில சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, கொரோனா பொறுப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். 


புதுச்சேரியில் மாநிலத்தில் 7 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் முதல் தவணை தடுப்பூசியை 6 லட்சத்து 9 ஆயிரம் பேரும், 2 தவணை தடுப்பூசியை ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேரும் போட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நோயின் தாக்கம் குறையும். நோய் வந்தால்  கூட மருத்துவமனைகளில் சேர வேண்டிய அவசியம் இருக்காது.



வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 80 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஓரளவுக்கு பாதுகாப்பு கிடைக்கும். கொரோனா மூன்றாவது அலை வரும் என்று கூறப்படுகிறது. தற்போது கேரளா, கர்நாடக மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.


மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளிலும் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. மாஹேவில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். புதுவையில் தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்னும் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. கொரோனா முதல் அலையின் போதே நாள் தோறும் 5 முதல் 10 குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டனர். கடந்த 3 நாட்களாக குழந்தைகள் யாரும் பாதிக்கப்படவில்லை. குழந்தைகளில் 56 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.



கொரோனா 3-வது ஆலை தாக்கம் இருக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை. இருந்த போதிலும் 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியை திறந்து பாடம் நடத்தினால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசுக்கு தெரிவித்துள்ளோம். பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது அரசு தான். மூன்றாவது அலை தாக்கம் இருக்கும் என்று கூறப்படுவதால் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முடிவு எடுப்பதில் சற்று தாமதப்படுத்தலாம் என்று அரசுக்கு தெரிவித்துள்ளோம் என தெரிவித்தனர்.


புதுச்சேரி: மீண்டும் அதிகரிக்கும் எண்ணிக்கை : 60 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!


 


ஜிஎஸ்டி வரியால் புதுச்சேரி அரசுக்கு கடும் நிதியிழப்பு- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சு...!