வேதங்கள், புராணங்கள் உள்ளிட்ட இந்திய அறிவுசார் அமைப்பின் பல்வேறு அம்சங்களில் நிபுணத்துவம் பெறுவதன் மூலம் மாணவர்கள் தங்களுக்கான கிரெடிட் மதிப்பெண்களைப் பெறலாம் என்று தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவில் கூறப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, உயர் கல்வி, தொழில் கல்வி மற்றும் திறன் கல்வியில் இருந்து பெறப்படும் கிரெடிட் மதிப்பெண்களை ஒருங்கிணைக்கவும் வரைவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 


மத்தியக் கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவை அண்மையில் வெளியிட்டது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் பங்குகொண்டு, கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


12ஆம் வகுப்புத் தேர்வுக்கு செமஸ்டர் முறை


புதிய கல்விக் கொள்கையை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு 2020ஆம் ஆண்டு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் படிப்படியாக கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தொடக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் வகுப்பு வரை எழுத்துத் தேர்வு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆண்டுக்கு 2 முறை சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வை நடத்தவும் செமஸ்டர் முறையை அறிமுகம் செய்யவும் முன் வரைவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 


இதைத் தாண்டி, பாலின சமத்துவ சீருடைகள், வகுப்பறை இருக்கைகள் ஏற்பாடு, இந்தியக் கலாச்சாரத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றுவது குறித்தும் முன் வரைவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


அதேபோல வேதங்கள், புராணங்கள் உள்ளிட்ட இந்திய அறிவுசார் அமைப்பின் பல்வேறு அம்சங்களில் நிபுணத்துவம் பெறுவதன்மூலம் மாணவர்கள் தங்களுக்கான மதிப்பெண்களைப் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, உயர் கல்வி, தொழில் கல்வி மற்றும் திறன் கல்வியில் இருந்து பெறப்படும் கிரெடிட் மதிப்பெண்களை ஒருங்கிணைக்கவும் வரைவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 




5ஆம் வகுப்பில் இருந்து பிஎச்.டி. வரை


இதன்மூலம் 5ஆம் வகுப்பில் இருந்து பிஎச்.டி. வரை கற்பித்தல் நேரங்களைக் கணக்கிட்டு, கிரெடிட் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு கிரெடிட் மதிப்பெண்ணுக்கும் மொத்தம் 30 மணி நேரம் கற்க வேண்டும்.  


ஒவ்வொரு பாடம் மற்றும் கற்றலுக்கும் மதிப்பெண்கள் வழங்க, தேசிய பாடத்திட்ட முன் வரைவு பரிந்துரைக்கிறது. அதாவது வகுப்பு கற்பித்தல்/ கற்றல், ஆய்வகப் பணிகள், கண்டுபிடிப்பு ஆய்வகங்கள், விளையாட்டுகள், யோகா, உடல் செயல்பாடுகள், கலைகள், இசை, கைவினைக் கலை, சமூக சேவை, என்சிசி மற்றும் பிற கற்றலுக்கும் கிரெடிட் மதிப்பெண்கள் வழங்கப்படும். 


18 விதமான கற்றல் வழிமுறைகள், 64 விதமான கலைகள், பயன்பாட்டு அறிவியல் அல்லது தொழில்சார் துறைகள் மற்றும் கைவினைக் கலைகளுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன.


துணை வேதங்களுக்கும் மதிப்பெண்கள்


ஆயுர்வேதம், தனுர்வேதம், கந்தர்வ வேதம், சிற்பக் கலை உள்ளிட்ட துணை வேதங்கள், தர்மசாஸ்திரம், வேதாங்கம், உச்சரிப்பு, இலக்கணம், மீட்டர், வானியல், சடங்குகள் மற்றும் தத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் கிரெடிட் உண்டு. பழங்கால இந்தியாவில் 18 அறிவியல்களின் அடிப்படையை இவைதான் உருவாக்கி இருக்கின்றன என்றும் முன் வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பள்ளிக் கல்வியின் ஒரு பகுதியாக இந்திய அறிவுசார் அமைப்பு (IKS option) இருக்கும் என்றும் யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.