ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது முதல் மின்சார வாகனத்தை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, சென்னைக்கு அருகே உள்ள அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் தான் புதிய மின்சார வாகனம் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம்:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து தொடர்ந்து, பல்வேறு புதிய மாடல் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. காலத்திற்கேற்றவாறு தொடர்ந்து தன்னை அப்டேட் செய்து வருவதே, ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் வெற்றிக்கான மிகப்பெரிய காரணமாகும். அந்த வரிசையில் பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவில் அனைத்து மாடல்களையும் களமிறக்கி வரும் ராயல் என்ஃபீல்டு, அடுத்ததாக மின்சார வாகனங்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
முதல் மின்சார வாகனம்:
மின்சார ஹிமாலயன் மாடல் பற்றிய விவரங்கள் அண்மையில் இணையத்தில் வெளியான நிலையில், இது தான் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் என்றும் கூறப்பட்டது. மின்சார வாகனங்கள் பிரிவை பொருத்தவரை முதலில் அதிக விலை கொண்ட மற்றும் பிரத்தியேக மோட்டார் சைக்கிள் மாடலை அறிமுகம் செய்ய ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து மலிவு விலை வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் மாடலின் பெயர் என்ன?
ராயல் என்ஃபீல்டு உருவாக்கி வரும் முதல் மின்சார வாகனம் L1A எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மற்றொரு பிளாட்ஃபார்மை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த பிளாட்ஃபார்ம் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு மின்சார வாகன நிறுவனமான ஸ்டார்க்-இல் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கணிசமான பங்குகளை வாங்கி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிய மோட்டார் மோட்டார்சைக்கிள் மாடல் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், இந்த திட்டம் அமலுக்கு வர அதிக காலம் ஆகும் என்றே தெரிகிறது.
சென்னையில் உற்பத்தி:
இதனிடையே, ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம், சென்னை அடுத்த ஒரகடத்தில் உள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் புதிய மின்சார வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் முழுமையாக ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் எனவும், இரண்டாவது மின்சார வாகனம் ஸ்டார்க் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு சந்தைக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI