ஒன்றாம் வகுப்பு மெட்ரிக் பாடப்பிரிவில் உள்ள பொது அறிவு புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறுவயதில் முதலையை வீட்டிற்கு பிடித்து வந்ததாக கூறிய கதை இடம்பெற்றுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம், ஜிம் கார்பெட் தேசிய வனவிலங்கு பூங்காவில் கடந்த 2019 ம் ஆண்டு பியர் கிரில்ஸும், இந்திய பிரதமர் மோடியும் சாகச காட்டுப் பயணம் மேற்கொண்டனர். இது 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மோடி சொன்ன விஷயம் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. மோடி சிறுவயதில் உள்ளூரில் இருந்த ஒரு குளத்துக்கு குளிக்கச் சென்று இருக்கிறார். அப்போது அங்கிருந்து ஒரு முதலைக் குட்டியை வீட்டுக்கு கொண்டு வந்து இருக்கிறார்.
இது பற்றி மோடி நினைவு கூர்ந்த போது, “இது தவறு என்று என் அம்மா உணர்த்தினார்கள். நீ இதைச் செய்திருக்கக் கூடாது. திரும்பக் கொண்டு போய் குளத்தில் விட்டு விட்டு வா என்று அம்மா சொன்னார்கள். அதன்படியே செய்தேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு மெட்ரிக் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகத்தில் பிரதமர் மோடி சொன்ன முதலைக் கதை இடம்பெற்றுள்ளது. இது மெட்ரிக் பாடப்பிரிவில் உள்ள பொது அறிவு புத்தகத்தில் வந்துள்ளது. அதில் உங்களுக்கு தெரியுமா என்ற பகுதியில் முதலை குறித்த தகவல்கள் மற்றும் மோடி படத்துடன் மோடி சொன்ன முதலை கதை குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. பிரதமர் ஒட்டு மொத்த நாட்டின் கண்காணிப்பாளர் போன்றவர் எனவும், நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின் 14 வது பிரதமர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிறு வயதில் மோடி மிகவும் தைரியமாக இருந்தார் எனவும், ஒருமுறை குட்டி முதலையை பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்