எந்தத் தனியார் கல்லூரி, அரசுக் கல்லூரிகளாக இருந்தாலும் அங்கு சேர்ந்த மாணவர்கள், வேறு கல்லூரியில் சேர விரும்பினால் அனுமதிக்க வேண்டும். அவர்கள் கட்டிய பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 


பொறியியல் கலந்தாய்வு அட்டவணை இன்று (ஜூலை 13) காலை கிண்டி, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். இதன்படி,  பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது ஜூலை 28ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:


’’பொறியியல் படிப்பில் சேர 1,87,847 பேர் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தினர். இவர்கள் அனைவரின் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன.  அங்கீகாரம் பெற்ற 430 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையை நடத்த உள்ளன. இதில் 1,57,378 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 3,100 இடங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. 


 11,804 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து படித்து, பொறியியல் படிப்பில் சேர உள்ளனர். இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 236 இடங்கள் அதிகமாகும்.


செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கலந்தாய்வு


காலி இடங்கள் இல்லாத அளவுக்கு மீண்டும் கூடுதலாக ஒரு கலந்தாய்வு நடத்தப்பட்டு, இடங்கள் நிரப்பப்படும். கடந்த ஆண்டைப் போல அல்லாமல், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் காலி இடங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். அதேபோல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கலந்தாய்வுப் பணிகளை முடிக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. அதற்குள் பணிகள் முடிக்கப்பட்டு காலி இடங்கள் நிரப்பப்படும். அதைத் தாண்டியும் இடங்கள் இருந்தால், கூடுதலாக ஒரு கலந்தாய்வு நடத்தப்படும். 


எந்தத் தனியார் கல்லூரி, அரசுக் கல்லூரிகளாக இருந்தாலும் அங்கு சேர்ந்த மாணவர்கள், வேறு கல்லூரியில் சேர விரும்பினால் அனுமதிக்க வேண்டும். அவர்கள் கட்டிய பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்’’. 


இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 


மாணவர்கள் பொறியியல் இடங்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்


* ஒவ்வொரு கட்டப் பொறியியல் கலந்தாய்வும் 12 நாட்கள் நடைபெறும்


* முதல்  3 நாட்கள் மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்


* 2 நாட்கள் மாணவர்கள் தங்களின் உத்தேச ஒதுக்கிட்டு ஆணையை ஏற்றுக் கொள்ள வேண்டும்


* இறுதியாக மாணவர்கள் தங்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்ய வேண்டும்


* தங்களுக்கான இடங்களை மாணவர்கள் உறுதி செய்த பின்னர் ஐந்து தினங்களுக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.


கூடுதலாக ஒரு கலந்தாய்வு


சிறப்புப் பிரிவுக்கு 1, பொதுப் பிரிவுக்கு 2 என மொத்தம் 3 கட்டங்களாகக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலி இடங்கள் இருந்தால், அவற்றை நிரப்பக் கூடுதலாக ஒரு கலந்தாய்வு நடத்தப்படவும் திட்டமிடப்பட்டு வருகிறது.