தஞ்சாவூர்: குழந்தைகள் சிரித்தால் பூக்கள் தாங்களும் சேர்ந்து சிரித்துச் சிலிர்க்கும். குழந்தைகள் நடந்து வந்தால் புயல் கூட விலகி நிற்கும். ஓடி விளையாடும் சின்னஞ்சிறு குட்டிப்புயல்களை கண்டு தென்றலும் திகைத்து நிற்கும். குருவியினங்களும் கவிதைப்பாடும். வெற்றி மாலை சூடி வரும் மாணவச் செல்வங்களை கண்டால் வானுயர்ந்த மரங்களும் பூத்தூவும்.
கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும். கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தெரிவித்தார். அதுபோல் கடின முயற்சி, போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்து ஆரம்ப வகுப்பிலேயே அசத்துகின்றனர் வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள்.
இந்த குட்டிப்புயல்களின் அதிரடி வெற்றிக்களங்களும், பரிசுகளும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. பரிசுகளையும், சான்றிதழ்களையும் குவித்து மேல்நிலை வகுப்பு மாணவிகளையும் அசரடிக்கின்றனர். தஞ்சை மாவட்டம் வல்லத்தில் இயங்கி வருகிறது அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவிகள் மட்டும் பயின்று வருகின்றனர்.
இந்த தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் தான் பல்வேறு போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
1ம் வகுப்பு மாணவி சஹானா அருள்மொழி சன்மார்க்க சபை நடத்திய திருவருட்பா ஒப்பித்தல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். ராம்சரண் இரண்டாம் பரிசும், ஹரிஹரசுதன் மூன்றாம் பரிசும் பெற்று அசத்தியுள்ளனர். இதேபோல் ஆர்சிபா முதல் பரிசு, கீர்த்திகா இரண்டாம் பரிசு, தஸ்னீம், ரித்தீஷ் 3ம் பரிசு பெற்று பாராட்டுக்களை குவித்துள்ளனர்.
இரண்டாம் வகுப்பு மாணவி கௌரி மித்ரா திருவருட்பா ஒப்பித்தலில் முதல் பரிசு, மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் பாட்டு பாடுதலில் முதல் பரிசு, மாணவி சுபஸ்ரீ கிராமிய நடனம் போட்டியில் மூன்றாவது பரிசு திருவருட்பா ஒப்பித்தலில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்.
இதேபோல் மகிஷா திருவருட்பா ஒப்பித்தல் போட்டியில் 2ம் பரிசு, ஸ்ரீநிஷா மூன்றாம் பரிசு, மோகிதா வினா விடை போட்டியில் மூன்றாம் பரிசு, ஜாசினா பேகம் வினா விடை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர். இரண்டாம் வகுப்பு மாணவி நித்ய ரூபினி மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் பாட்டு பாடுதலில் வெற்றி பெற்றுள்ளார். மாணவர் சண்முகேஷ் திருவருட்பா ஒப்பித்தலில் முதல் பரிசு பெற்றுள்ளார். ஜோஸ்னா இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
3ம் வகுப்பு மாணவி தமிழ் தாரணி விழிப்புணர்வு போட்டியில் மூன்றாம் பரிசு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் ஓவியப் போட்டியில் பங்கேற்பு. அஜய் திருவருட்பா ஒப்பித்தலில் இரண்டாம் பரிசு, அபிராமி முதல் பரிசு பெற்று அசத்தியுள்ளனர்.
நாலாம் வகுப்பு மாணவர் சுசேந்திரன் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மாணவி வினிக்சா விழிப்புணர்வு போட்டியில் இரண்டாம் பரிசு. வினா விடை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். மாணவர் சபரிநாதன் வினா விடை போட்டியில் இரண்டாம் பரிசு, மாணவி ரித்திகா திருவருட்பா ஒப்பித்தலில் இரண்டாம் பரிசு, மாணவி ஜீவாஸ்ரீ மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் ஓவியம் வரைதலில் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
நாலாம் வகுப்பு மாணவி வர்ஷினி கலைப் பண்பாட்டுத்துறை, மண்டல கலை பண்பாட்டு மையம், ஜவகர் சிறுவர் மன்றம் நடத்திய மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் கிராமிய நடனத்தில் பரிசு பெற்றுள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ. மாணவிகளுக்கு படிப்பு மட்டுமின்றி கலைத்திறன், தனித்திறமை, ஓவியம் வரைதல், கட்டுரை போட்டிகளில் பங்கேற்க செய்தல் போன்றவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களது திறமையை வெளிப்படுத்துவதில் ஆசிரியைகள் ஜெபமணி செல்வராணி, ஜென்சி நிர்மலா பாய், முத்துச்செல்வி, கலையரசி, பாத்திமா மேரி, மகேஸ்வரி, எமி மேபல் ஆகியோர் பயிற்சிகள் அளித்து வெற்றிகள் பெறச் செய்து வருகின்றனர்.
இந்த குட்டி புயல்களின் சூறாவளி போன்ற வெற்றிகள் பள்ளிக்கு மேன்மேலும் பெருமையை சேர்த்து வருகிறது.