ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் உறுதி கொடுத்துள்ளார். 


தஞ்சை அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாடம்  நடத்திக்கொண்டிருக்கும்போதே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.


பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் 4 மாதங்களுக்கு முன்புதான் ரமணி பணியில் சேர்ந்துள்ளார். 26 வயதான ஆசிரியை ரமணியை, 30 வயதான மதன்குமார் என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ரமணியைப் பெண் கேட்டு வீட்டுக்கும் சென்றுள்ளார். ஆனால் அவருக்குப் பெண் தர ரமணியின் பெற்றோர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. 


இந்த நிலையில், ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:


’’தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது.


தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை


தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்’’.


இவ்வாறு அமைச்சர் அன்பில் தெரிவித்துள்ளார்.