தஞ்சாவூர்: தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் ரயில்வே பெட்டிகள், கப்பல், ஆம்னி பஸ் போன்று ஓவியங்களால் தத்ரூபமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ரயிலில் செல்வதை போல் உணர்கின்றனர். தனியார் பள்ளிகளை மிஞ்சி இப்பள்ளி பல்வேறு விதத்திலும் சிறப்பு பெற்றுள்ளது.


தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 130  மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக சித்ரா மற்றும் ஆசிரியைகளாக சிவசங்கரி, லதா, ரேவதி ஆகிய 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.


இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விமானத்தை நேரில் பார்க்க ஆசை. இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் செய்தனர். ஆனால் அது இயலாத காரியமாகவும், அனுமதியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் எடுத்த வித்தியாசமான முடிவு இன்று அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. அதுதான் பள்ளி கட்டிடங்களையே ரயில் பெட்டிகள், கப்பல், விமானம், ஆம்னி பஸ் போல் மாற்றுவது.


இதற்கு பிள்ளையார்பட்டி ஊராட்சித் தலைவர் உதயகுமார், பள்ளி கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழு, மாணவர்களின் பெற்றோர் என அனைத்து தரப்பினரும் இதற்கு உறுதுணையாக இருந்தனர். மேலும் முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார் மற்றும் உட்கட்டமைப்புக்கு அரசு சார்பில் நிதி அளிக்கப்பட்டது. தற்போதைய முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் பள்ளியின் வளர்ச்சிக்கு பக்கபலமாக செயல்பட பள்ளி சுவரில் விமானம், ரெயில், கப்பல், ஆம்னி பஸ் போன்றவற்றின் வரைப்படத்தை ஓவியர் நரசிம்மன் மூலம் தத்ரூபமாக வரைய செய்தனர்.




மேலும் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோள்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள், தண்ணீர் சேமிப்பு, நாட்டுப்புற கலைகள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அறிவுசார் ஓவியங்களும் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன.


ஆசிரியைகளின் இந்த அசத்தல் செயலால் மாணவ, மாணவிகள் சுவரில் வரையப்பட்டுள்ள ரெயில், கப்பல் போன்றவற்றில் ஏறுவது போல பள்ளி உள்ளே செல்கிறார்கள். பின்னர் அவற்றில் இருந்து இறங்குவது போல பள்ளியில் இருந்து வெளியே செல்கின்றனர். இதுதவிர மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்பட பல்வேறு தேச தலைவர்களின் ஒவியம், அவர்கள் போதித்த வாசகம் ஆகியவையும் வரையப்பட்டுள்ளதால் மாணவர்களின் தேசப்பக்தியையும் வளர்ச்சி அடைய செய்ய முடிகிறது.


பள்ளி முகப்பு தோற்றத்தில் மகிழ்ச்சியான பிரபஞ்சத்திற்கு வரவேற்கிறோம் என்றும், ஒவ்வொரு வகுப்பறைக்கும் மகிழ்ச்சி வகுப்பறை, நம்பிக்கை, தேனீக்கள், நேர்மை வகுப்பறை என ஓவியமாக எழுதி பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்த தத்ரூப ஓவியம் மூலம் படிப்போடு பொது அறிவையும் மாணவர்கள் வளர்த்து கொள்கின்றனர். ஆசிரியர்களின் இந்த செயலால் பிள்ளையார்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி அனைத்து தரப்பினரையும் வியப்படைய வைத்துள்ளது.


இதுகுறித்து ஊராட்சித் தலைவர் உதயக்குமார் கூறுகையில், இப்பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி தனிநபர் திறமைகளிலும் சாதனைகள் படைத்துள்ளனர். மாணவர்கள் உற்சாகம் அடையும் வகையில் வகுப்பறைகளையே ரயில் பெட்டிகள் போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கப்பல் போலும், ஆம்னி பேருந்து போலும் வரையப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிலேயே செல்வது போன்று உணர்கின்றனர். இதனால் பள்ளிக்கு வருகை தருவதை மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் மாணவர்களின் கல்வித்திறனும் அதிகரிக்கிறது. ரயில், கப்பலில் போவதை போல் உணர்ந்து பாடங்களை நன்கு கவனிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.