பிற மாநிலங்களைப்‌ போல்‌ தமிழ்நாட்டிலும்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு (TNTET) தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து வழங்க வேண்டும் என்று ஆண்டுதோறும்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு எழுதும்‌  லட்சக்கணக்கான தேர்வர்கள்‌ சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்துத் தகுதித் தேர்வை எழுதும் தேர்வர்கள் கூறி உள்ளதாவது:


''இந்திய அரசின்‌ கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டப்‌படி (RTE) ஆசிரியராகப் பணிபுரிய ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தேர்ச்சி பெறுதல்‌ கட்டாயம்‌ ஆகும்‌. ஆந்திரா, தெலங்கானா, ஒரிசா, பீகார்‌, நாகலாந்து, சத்தீஸ்கர்‌ போன்ற பெரும்பாலான மாநிலங்களில்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தேர்ச்சி மதிப்பெண்‌பொதுப்‌ பிரிவினருக்கு 90 ஆகவும்‌ BC/ MBC/ SC/ ST / DNC/ PWD ஆகிய இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 75 ஆகவும்‌ உள்ளது.


ஆனால்‌ தமிழ்நாட்டில்‌ மட்டும்‌ தேர்ச்சி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்‌ 2014 ஆம்‌ ஆண்டு வெளிவந்த சிறப்பு அரசாணைப்படி இன்னும்‌ 82 ஆகவே உள்ளது. தேர்வர்கள்‌ நலன்‌ கருதி 10 ஆண்டுகளாக எவ்வித மாற்றமும்‌ செய்யப்படவில்லை.


கூடுதல்‌ மனச்சுமை


மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில்‌ அரசு ஆசிரியர்‌ பணி பெற இரண்டு வகையான போட்டித்‌ தேர்வு எழுதும்‌ தேர்வர்களுக்கு இது கூடுதல்‌ மனச்சுமை தருகிறது.


தமிழ்நாட்டில்‌ அரசு ஆசிரியராகப் பணி நியமனம்‌ பெற ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தவிர மீண்டும்‌ ஒரு போட்டித்‌ தேர்வு எழுத வேண்டிய சூழல்‌ உள்ளது. ஆகவே அரசுப் பணிக்கு உதவாத வெறும்‌ தகுதியை மட்டும்‌ தீர்மானிக்கும்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு மதிப்பெண்ணை BC/ MBC/ SC/ ST / DNC/ PWD உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 75 ஆக குறைத்து வழங்க வேண்டும்‌ .


ஆண்டு தோறும்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு எழுதும்‌ லட்சக்கணக்கான ஆசிரியர்கள்‌ கோரிக்கையை தமிழ்நாடு அரசு கனிவுடன்‌ பரிசீலித்து மற்ற மாநிலங்களில்‌ உள்ளதுபோல்‌ தமிழ்நாட்டிலும்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு எழுதும்‌ ஆசிரியர்களுக்கு சமூகநீதி, சம உரிமை கிடைத்திடச்‌ செய்ய வேண்டும்''.


இவ்வாறு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத உள்ள தேர்வர்கள்‌ தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்‌.


தாமதாகும் டெட் தேர்வு


டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு, மாநில அரசு, மத்திய அரசு சார்பில் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறையின்படி ஆண்டுக்கு இரண்டு முறை டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும்.


ஆனால் தமிழ்நாட்டில் தமிழகத்தில் டெட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை கூட அறிவித்த தேதியில் நடத்தப்படுவது இல்லை. 2022-ல் நடத்தப்பட வேண்டிய டெட் தேர்வு, 2023 பிப்ரவரியில் நடந்தது.


 2024-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை மாதம் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. எனினும் செப்டம்பர் மாதம் ஆகியும். டெட் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.