ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள்,14-10-22 முதல் 20-10-22 வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement


அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.


இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்.


இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க ஏப்ரல் 26ஆம் தேதி வரை கால அவகாசம்‌ வழங்கப்பட்டது. ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள்‌1-க்கு 230,878 பேரும்‌ மற்றும்‌ தாள் 2-க்கு 401886 பேரும்‌ என மொத்தமாக 6,32764 பேர் விண்ணப்பித்தனர்‌.




ஏற்கெனவே ஒத்தி வைப்பு


தாள் 1-ற்கான தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தத் தேர்வு செப்டம்பர் 10 முதல்‌ 15 வரை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள்,14-10-22 முதல் 20-10-22 வரை இருவேளைகளில்‌ தேர்வு நடத்தப்பட உள்ளது.


இதுகுறித்து மேலும் கூறியுள்ள ஆசிரியர் தகுதி வாரியம், ’’மேற்படி கணினி வழித்‌ தேர்வுக்காக (Computer Based Examination) பயிற்சித்‌ தேர்வு ‌ (Practice Test) மேற்கொள்ள விரும்பும்‌ தேர்வர்கள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணைய தளத்தில்‌ பயிற்சியினை மேற்கொள்வதற்கும்‌ வாய்ப்பு வழங்கப்பட்‌டுள்ளது.


அனைத்து பணிநாடுநர்களும்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்‌. தேர்வு கால அட்டவணை மற்றும்‌ அனுமதிச்சீட்டு (Admit Card) வழங்கும்‌ விவரம்‌ அக்டோபர்‌ முதல்‌ வாரத்தில்‌ அறிவிக்கப்படும்‌’’ என்று அறிவித்துள்ளது.