கோவை காந்திபுரம் அருகே உள்ள சித்தாபுதூர் பகுதியில் பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பாஜக அலுவலகத்தை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு பாஜக அலுவலகத்திற்கு அருகே விழுந்தது. அதேசமயம் பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசாம்பாவிதங்கள் மற்றும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.


இதேபோல ஒப்பணக்கார வீதியில் வட மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான மாருதி என்ற துணிக்கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதில் கடையின் முன்பாக இருந்த அட்டை மீது விழுந்து தீப்பற்றியுள்ளது. கடையில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. கோவையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியது. அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீச்சிற்கான காரணம் மற்றும் இச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் பா..க நிர்வாகிகள் கார் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர் ஆட்டோ கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் பா... நிர்வாகிகள் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி வார்டு பொறுப்பாளர் சரவணக்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் பொன்ராஜ் மற்றும் சிவாவின் கார் கண்ணாடிகளை கோடாரியால் அடித்து உடைத்துள்ளனர். இதேபோல சரவணக்குமார் மற்றும் அவரது தந்தை வேணுகோபால் ஆகியோரது இரண்டு ஆட்டோ கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மேலும் கார் மற்றும் ஆட்டோக்களை டீசல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறித்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் கோவையில் மேலும் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பாஜக ரத்தினபுரி பகுதி மண்டல தலைவராக மோகன் என்பவர் இருந்து வருகிறார். இவர் காந்திபுரம் நூறடி சாலையில் மோகன் வெல்டிங் அசஸரிஸ் என்ற கடை நடத்தி வருகிறார். இன்று காலை அவரது மகன் மகேந்திரன் வழக்கம் போல கடை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் முன்பாக கண்ணாடிகள் சிதறிக் கிடந்துள்ளன. மேலும் கடையின் ஷட்டர் மீது பெட்ரோல் சிந்தியிருந்துள்ளது. இதையடுத்து அக்கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், அதிர்ஷ்டவசமாக அது வெடிக்காததால் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து இரத்தினபுரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் மதன் குமார்,சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடை உள்ளது. இன்று காலை கடைக்கு வந்த பணியாளர்கள் கடைகளின் பின்புற ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்ற பணியாளர்கள் பார்த்த போது, அங்கு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் வெளியே நின்றவாறு, உள்ளே பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சில பிளைவுட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண