தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பள்ளி இறுதி நாள் வரை பணிபுரிய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:


பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ வரும்‌ நகராட்சி / அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில்‌ 2023- 2024ஆம்‌ கல்வியாண்டில்‌ இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்‌ மற்றும்‌ முதுகலை ஆசிரியர்‌காலிப் பணியிடங்களை நேரடி நியமனம்‌, பதவி உயர்வு மூலம்‌ நிரப்பும்‌ வரை பள்ளி மேலாண்மை குழு மூலமாக தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்களை நியமனம்‌ செய்ய அனுமதி வழங்கப்பட்டது.


ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை தற்காலிக ஆசிரியர்கள் பணி


இந்நேர்வில்‌, பள்ளிக் கல்வித்துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில்‌ 2023-2024ஆம்‌ கல்வியாண்டில்‌ காலிப்பணியிடங்கள்‌, பணியில்‌ உள்ள ஆசிரியர்கள்‌ மகப்பேறு விடுப்பில்‌ சென்றதால்‌ ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ தற்காலிக இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள்‌ நியமனம்‌ செய்து சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்‌ மூலம்‌ ஆணை வழங்கப்பட்டது.


பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளின்படி, பள்ளி (மேலாண்மைக்குழு மூலம்‌ நியமனம்‌ செய்யப்பட்ட தற்காலிக இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ நியமனம்‌ செய்யப்பட்ட தற்காலிக இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள்‌ கீழ்க்கண்டவாறு, சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இதன்‌ மூலம்‌ தெரிவிக்கப்படுகிறது.


பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ நியமனம்‌ பள்ளி இறுதி செய்யப்பட்‌ட தற்காலிக ஆசிரியர்கள்‌


முதுகலை ஆசிரியர்கள்‌- 25.03.2024 வரை (மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத் தேர்வு இறுதி நாள்‌) பள்ளி இறுதி வேலை நாளாக இருக்கும்.


அதேபோல இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்‌ - 2023- 2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளியின்‌ இறுதி வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோடை விடுமுறை எப்போது?


முன்னதாக ஏப்ரல் 12ஆம் தேதியோடு 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் முடிந்து, பள்ளி இறுதி வேலை நாளாக இருக்கும் என்றும் ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, முன்கூட்டியே தேர்வுகள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறையும் முன்கூட்டியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.