தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக, தலைமை ஆசிரியர் சூர்யநாராயணா செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரு பெண்ணின் உருவத்தை உருவாக்கி, பிரச்சாரம் செய்து வருகிறார். இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை


ஒரு காலத்தில் அரசுப் பள்ளிகள்தான் நாடு முழுவதும் கோலோச்சி வந்தன. 1990-களில் தாராள மயமாக்கலுக்குப் பிறகு தனியார் பள்ளிகள் படையெடுக்கத் தொடங்கின. தனியார் பள்ளிகள் பெருகிய பிறகு, அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.


எனினும் தன்னலமற்ற, அர்ப்பணிப்பு மிகுந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு பள்ளிகளை மேம்படுத்தி, மாணவர் சேர்க்கையை உயர்த்தி வருகின்றனர்.


இந்த நிலையில் தெலங்கானா மாநிலம், ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சூர்ய நாராயணா. இவர் இந்தக் கல்வியாண்டில் தனது பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.


ஏஐ இளம்பெண் மூலம் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு


அப்போது பி.டெக். படிக்கும் தனது மகள் மூலமாக ஏஐ பயன்பாடு பற்றி தெரிய வந்துள்ளது. அதன் பிறகு போதிய உதவிகளோடு விர்ச்சுவல் உருவில் ஏஐ இளம்பெண்ணை உருவாக்கி உள்ளார். ஏஐ பெண் மூலம் தனது பள்ளியின் சிறப்பு அம்சங்களை அனைவரிடமும் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டு உருவாக்கி உள்ளார்.


பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த ஏஐ பெண் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  தெலுங்கு மொழியில் பேசும் வகையில் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஆங்கில வழிக் கல்வி, சிறந்த அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல், மதிய உணவு, இலவச பாடப் புத்தகம், இரண்டு சீருடைகள், டிஜிட்டல் வழிக் கல்வி’’ என்பன உள்ளிட்ட பள்ளியின் பல்வேறு சிறப்பம்சங்கள் கூறப்பட்டு உள்ளன.


கடந்த ஆண்டுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த செய்தி ஆங்கில ஊடகத்தில் வெளியாகி உள்ளது.