நடிகர் விதார்த் நடித்துள்ள அஞ்சாமை படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. 


அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “அஞ்சாமை”. இவர் இயக்குநர்கள் லிங்குசாமி, மோகன் ராஜா ஆகிய இருவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அஞ்சாமை படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 






“தேர்தலுக்கு முன் கையெடுத்து கும்பிடுவது நீங்கள்.. தேர்தலுக்கு முன் குனிவது நாங்களா”, “கார்ப்பரேட் நிறுவங்களுக்கு கைக்கூலியாகி நாட்டை விற்கிறார்கள்”, “படிச்சா போதும்னு ஒரு காலம்.. பின்னர் மார்க் எடுக்க வேண்டும் என சொன்னார்கள்.. இப்ப நான் சொல்றது தான் படிக்கணும்ன்னு சொல்றாங்க”, ‘கல்வியை கஷ்டப்பட்டு தான் படிக்கணுமா?.. அப்படி உருவாக்கி வச்சிருக்காங்க என்னைக்காவது நாம யோசிக்கிறோமா?”, “பள்ளியில் படித்த கல்வி அந்த கல்வி தகுதியில்லை என்றால் அதை ஏன் படிக்க வேண்டும்?”, “நம்மகிட்ட இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி தான்” என உணர்வுகளை தூண்டும் வசனங்களும் இடம் பெற்றுள்ளது. 


மேலும் ட்ரெய்லரில் ஆங்காங்கே நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை, நீட் தேர்வில் நடத்தப்படும் சோதனைகள், கோச்சிங் வகுப்புகள் உள்ளிட்டவை வெளிப்படையாகவே காட்டப்படுகிறது. மேலும் நீட் தேர்வு வருவதற்கு முன்னர் மாநில பாடத்திட்டத்தில் படித்து இன்று தலை சிறந்த மருத்துவர்களாக இருப்பவர்களையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள். பல படங்கள் நீட் பற்றி மேலோட்டமாக காட்சிகளும், வசனங்களும் வைக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் வெளிப்படையாகவே நீட் தேர்வுக்கு எதிராக கதை அமைக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உண்டாக்கியுள்ளது. 



சென்சார் சென்ற பிறகு எத்தனை காட்சிகள் மியூட் செய்யப்படும் என்றும், காட்சிகளுக்கு கட் சொல்லப்போகிறார்கள் என தெரியவில்லை என ட்ரெய்லர் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்துள்ளனர்.