போலி எம்பிஏ பட்டம் தருவதாக மாணவர்களை சில தன்னம்பிக்கை பேச்சாளர்களும் இன்ஃப்ளூயன்சர்களும் ஏமாற்றி வருவதாக, ஏஐசிடிஇ எச்சரிக்கை விடுத்துள்ளது.


கலை, அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு நிர்வகித்து வருகிறது. அதேபோல பொறியியல் கல்லூரிகள்,  பல்கலைக்கழகங்களை ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் of ( All India Council for Technical Education AICTE) நிர்வகித்து வருகிறது. அந்த வகையில் கல்லூரிகளுக்கு அங்கீகாரத்துக்கு அனுமதி, ரத்து, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அம்சங்களை ஏஐசிடிஇ கட்டுப்படுத்தி வருகிறது.


இந்த நிலையில்,  போலி எம்பிஏ பட்டம் தருவதாக மாணவர்களை சில தன்னம்பிக்கை பேச்சாளர்களும் இன்ஃப்ளூயன்சர்களும் ஏமாற்றி வருவதாக, ஏஐசிடிஇ எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து ஏஐசிடிஇ துணைத் தலைவர் அபய் ஜெரி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:


''சில தன்னம்பிக்கை பேச்சாளர்களும் இன்ஃப்ளூயன்சர்களும் 10 நாட்கள் எம்பிஏ உடனடி வகுப்பை வழங்குவதாகக் கூறி ஏமாற்றி வருவதாக அகில இந்திய தொழில்நுட்பக் குழுமத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது.


இத்தகைய உடனடி எம்பிஏ படிப்புகள் ( crash course ) நாட்டின் இளம் மனங்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சி ஆகும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஏஐசிடிஇ –இடம் அனுமதி பெறாமல், எந்த ஒரு கல்வி நிறுவனமோ பல்கலைக்கழகமோ எம்பிஏ/ மேலாண்மைப் படிப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை நடத்தக் கூடாது.  


எம்பிஏ என்பது வணிகம் மற்றும் மேலாண்மைக் கூறுகளை பல்வேறு கோணங்களில் அறிந்து நவீனத் திறமைகள் மற்றும் அறிவை தனி நபர் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரண்டு ஆண்டு முதுநிலைப் படிப்பு ஆகும்.


அதனால் எம்பிஏ படிப்பு 10 நாட்களில் முடிக்கப்பட முடியாத ஒன்று. அதனால், மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.


தனி மனிதர்களோ, நிறுவனங்களோ எம்பிஏ படிப்பை வழங்குவதாகக் கூறுவது தவறாக வழிநடத்துவது ஆகும். அதனால் அத்தகைய தவறான, மோசடியாக தகவல்களை நம்பி யாரும் அத்தகைய படிப்பில் சேர வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது''.


இவ்வாறு ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.  


கூடுதல் தகவல்களுக்கு: https://aicte-india.org/sites/default/files/IMG_20231228_192922.JPG


தொலைதூரக் கல்வி மூலம் எம்பிஏ படிப்பில் சேரலாம். இதற்கு, தொலைதூரக் கல்வி நுழைவுத் தேர்வு எனப்படும் Distance Education Entrance Test (DEET) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அல்லது டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET - Tamil Nadu Common Entrance Test) தேர்வெழுதி, தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.