எம்.பில். படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படக் கூடாது என்று கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து யுஜிசி எனப்படும் பல்கலைககழக மானியக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


சில பல்கலைக்கழகங்கள் எம்.பில். படிப்புக்கு புதிதாக விண்ணப்பங்களைப் பெறுவதாக யுஜிசிக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, எம்பில் படிப்பு அங்கீகரிக்கப்பட்ட படிப்பு கிடையாது. யுஜிசி ஒழுங்குமுறை விதிகள் எண் 14-ன்படி (பிஎச்.டி. படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி மற்றும் வழிமுறைகள்), எம்.பில். படிப்புகளை, எந்த ஒரு கல்வி நிறுவனங்களும் வழங்கக் கூடாது.


இந்த விவகாரத்தில், யுஜிசி ஒழுங்குமுறை விதிகள் எண் 14-ஐ உருவாக்கியது. இதுகுறித்த விவரம் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி அரசிதழில் வெளியானது.


இந்த நிலையில் பல்கலைக்கழக அதிகாரிகள், 2023-24ஆம் கல்வி ஆண்டில், எம்.பில். படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’


இவ்வாறு பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் மணிஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.


எம்.பில். படிப்பை நிறுத்த என்ன காரணம்?


முதுநிலை பட்டதாரிகளுக்கான எம்.பில். படிப்புக்கு வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறைந்து வந்ததை கருத்தில் கொண்டும், புதிய தேசிய கல்விக் கொள்கை அம்சங்களின்படியும், எம்.பில் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனைப் பின்பற்றி பல மாநிலங்கள் எம்.பில் படிப்பை நிறுத்துவதாக அறிவித்தன. 


இந்த நிலையில், எம்.பில். படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படக் கூடாது என்று கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உயர் கல்வியில் தொடரும் சீர்திருத்தங்கள்


முன்னதாக பிஎச்.டி. மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரபல ஆய்விதழ்களில் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறையை யுஜிசி ரத்து செய்ய முடிவு செய்தது. 75% பிஎச்.டி. மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


பிஎச்.டி. படிக்கும் மாணவர்கள், முன்னணி ஆய்வு இதழ்களில் தங்களின் ஆய்வு கட்டுரைகளைப் பிரசுரிக்க வேண்டும் என்பது யுஜிசி விதிமுறையாகும். ஆனால் நடைமுறையில், தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான ஆய்விதழ்களில் 75 விழுக்காடு ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதில்லை. இதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ள யுஜிசி, பிரபல ஆய்விதழ்களில் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறையை ரத்து செய்ய உள்ளதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.