சம வேலைக்கு சம ஊதியம் கோரி, 25 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மாணவர்களின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. 

Continues below advertisement

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை  ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம்தான் கிடைக்கிறது.

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும்

Continues below advertisement

இதை எதித்து அப்போதில் இருந்தே ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி  (எண். 311) அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஐந்தாண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுமூகமான முடிவு எட்டப்படவில்லை

இதற்கிடையே கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். அரசு சார்பில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் 25 நாட்களுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடங்கியபோது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் பள்ளிகள் திறக்கப்பட்டும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படவில்லை. இதனால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஓராசிரியர் பள்ளிகளின் நிலை அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டன.

இரு மாதங்களில் ஆண்டுத்தேர்வு

இன்னும் இரு மாதங்களில் ஆண்டுத் தேர்வுகள் நடைபெறும் நிலையில், மாணவர்களின் கல்வி பாழாகி வருவதாக பெற்றோர்களும் கல்வியாளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.