தைத் திருநாள் நெருங்கி வரும் வேளையில் இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 18ஆம் நாளாகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பள்ளிக்கல்வி ஆசிரியர் கூட்டணியின் இயக்க நிறுவனர் காசி கூறி உள்ளதாவது:
தமிழக முதல்வருக்கு தமிழக பள்ளிக் கல்வி ஆசிரியர் கூட்டணியின் வேண்டுகோள்,
1.6.2009-க்குப் பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் சம மேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 26.12.2025 முதல் தொடர்ச்சியாக 18 நாட்களாக சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் போராடி வருகின்றனர்.
போராட்டத்தின் பின்னணி என்ன?
1.6.2009-க்கு பின் நியமிக்க பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதியின் குறைப்பு 6வது ஊதியக் குழுவில் இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதியாகும். இந்த அநீதியை, ஊதிய முரண்பாட்டை களைய இதற்கு முன் 15 ஆண்டுகளாக பல கட்டபோராட்டங்களை ஆசிரியர்கள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போதுள்ள தி.மு.க. அரசு 2021 தேர்தல் அறிக்கையில் எண் 311-ல் மேற்படி கோரிக்கையை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தது. ஆசிரியர் அரசு ஊழியர்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்று அமைந்த ஆட்சியின் பதவிக் காலம் நிறைவுறும் நிலையில் ஊதிய முரண்பாட்டு கோரிக்கை நிறைவேற்றாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
கல்வி நலன் கடுமையாக பாதிப்பு
மேலும் போராடும் இடைநிலை ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை, தாக்குதல் நடவடிக்கையை, கைது நடவடிக்கையை காவல் துறை மூலம் எடுப்பதும் கண்டிக்கத்தக்கது. இப்போராட்டத்தினால் மாணவர்களின் கல்வி நலன் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
தமிழர் திருநாள் நெருங்கும் நிலையில் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக முதல்வர் உடனடியாக கவனம் செலுத்தி சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றித் தரவும், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளைக் கைவிடவும், தமிழக பள்ளிக் கல்வி ஆசிரியர் கூட்டணி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.