தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.


ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கோரி நித்யா என்ற இடைநிலை ஆசிரியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்து உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில், ’’தற்போது ஆசிரியர்களாக உள்ள பலர், கல்லூரிகளுக்கு நேரில் சென்று படிக்காதவர்களாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது.


கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியர்கள் நியமன நடைமுறையை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதற்கிடையே கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் அறிக்கை சமர்ப்பித்தார்.


இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது. இதுகுறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் புவனா கோபாலன் கூறும்போது, ''தொலைதூரக் கல்வி படிப்புகள் கல்லூரிக் கல்விக்கு இணையானது என்று  செப்டம்பர் மாதத்தில் யுஜிசி தகவல் வெளியிட்டது.




இப்போது உயர் நீதிமன்றம் தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் அல்லர். எனவே நடைமுறையை மாற்றுங்கள் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் தேர்வு நியமனம் என்பது அரசின் கொள்கை முடிவுதானே. இதில் உயர் நீதிமன்றம் கருத்து சொல்ல முடியுமா?


ஆசிரியர் தகுதித் தேர்வை முடித்து, தகுதி நிலையில் உள்ள பலர் தொலைதூரக் கல்வியில் பயின்றவர்களே. அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை வருமா?'' என்று ஆசிரியர் புவனா கோபாலன் தெரிவித்தார்.


தேவையற்ற குழப்பங்களே ஏற்படும்


நீதிமன்றங்களின் திடீர் உத்தரவுகள் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''நான் 12ஆம் வகுப்பும் ஆசிரியர் பட்டயப் பயிற்சியும் (D.T.Ed) மட்டுமே நேரடியாகப் படித்தேன். B.SC, M.SC,B.Ed, M.Ed எல்லாமே தொலைதூரக் கல்விதான்.


ஆனால் ஆசிரியராவதற்கும் கற்பிக்கவும் நேரடிக் கல்வி முறை மட்டும்தான் சரி என்றால் என்னைப் போன்றவர்கள் பணிக்கே வரமுடியாதே. இப்போது எந்த விதத்திலும் மாணவர்கள் கற்றலுக்கு எனது தொலைதூரப் படிப்பு  தடையாக இல்லையே...? நீதிமன்றங்களின் திடீர் உத்தரவுகள் தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும். இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


* கல்வித் துறையின் ஆசிரியர்கள் பணி குறித்து ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு, நீதிமன்றம் ஒரு அறிவிப்பை வெளியிடலாமே?
* தொலைதூரக் கல்விக்காக இத்தனை பல்கலைக் கழகங்கள் இருப்பதன் அவசியம் என்ன?
* தொலைதூரக் கல்வியும் நேரடிக் கல்வியும் சமம் என்று யுஜிசி செப்டம்பர் மாதத்தில் வழங்கிய அனுமதிக்கு அர்த்தம் என்ன?
* தமிழ்நாட்டில் கல்வித்துறையை ஏற்கனவே பலவாறு காயப்படுத்தி வரும் சூழலில்....இப்படி ஒரு அறிவிப்பு எதற்கு?


இதில் அரசு தலையிட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்று ஆசிரியர் உமா மகேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.




பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் திறந்தவெளி, தொலைதூரக் கல்வி மற்றும் இணைய வழிப்படிப்புகள், வழக்கமான நேரடிக் கல்விக்கு சமமாக  கருதப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.