ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ’’
மிக விரைவில் போராட்டக் களத்தில் இருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். ஏனெனில் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. எந்தத் தொந்தரவும் இல்லாமல், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவே ஆசைப்படுகிறோம். ஒரு நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கையுடன் உள்ளோம். ஜாக்டோ ஜியோ போராட்டத்தைப் பொறுத்தவரை ஜனவரி 6ஆம் தேதி மீண்டும் போராட்டம் அறிவித்துள்ளனர்.
ஜனவரி 6ஆம் தேதிக்குள் நல்ல முடிவு
முன்னதாக ஏற்கெனவே, ஆசிரியர்கள் சங்கத்தினரை அழைத்துப் பேசினோம். அவர்கள் சில கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்கள். அந்தக் கருத்துகள் அனைத்தையும் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். முதல்வர் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பார். ஏற்கெனவே சொன்னதுபோல ஜனவரி 6ஆம் தேதிக்குள் நல்ல முடிவு ஆசிரியர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும்’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.