மலைவாழ் பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரம் உயர, ஸ்மார்ட் கிளாஸ், சொந்த செலவில் மின்னொலியில் கணித ஆய்வகம், கட்டிடங்களுக்கு மேற்கூரை, ஐந்து லட்சத்தில் நவீன மாதிரி கழிப்பறைகள், மாணவர்களுக்கு வேன் வசதி ஏற்படுத்தி சேர்க்கையை அதிகரித்துள்ள கணித ஆசிரியர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் ஊராட்சியில் பழங்குடியின சமூக மக்கள் மட்டுமே வசிக்கும் போதகாடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட ஆறு ஆசிரியர்கள், இரண்டு பகுதி நேர ஆசிரியர்கள் என எட்டு பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 140 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இது பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்ற பள்ளி என்பதால், ஆசிரியர் பாரதி பணியில் சேர்ந்த நாள் முதல் பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என எண்ணி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
பழங்குடியின குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த எல்இடி டிவி வசதி
மேலும் மலைவாழ் பழங்குடியின பிள்ளைகளின் கல்வி தரத்தை உயர்த்தும் தலைமையாசிரியர் பொறுப்பில் இருந்த கணித பட்டதாரி ஆசிரியர் செ.பாரதி, பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் எல்இடி டிவி வாங்கி கொடுத்து, அதன் மூலம் ஸ்மார்ட் கிளாஸ் நடத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து அறிவியல் ஆய்வகங்கள் இருப்பதைப் போல, கணித ஆய்வகம் ஒன்று உருவாக்க வேண்டும் என எண்ணி ஒரு அறை முழுவதும் தனது சொந்த செலவில் பல்வேறு வண்ணங்களில், கணித வாய்ப்பாடுகள், சூத்திரங்கள், கணிதவியலாளர்கள் படம் வரைந்து, அவர்களின் தத்துவங்களையும் சுவர் முழுவதும் எழுதி வைத்துள்ளார்.
சொந்த செலவில் கணித ஆய்வகம்
மேலும் மாணவர்களை கணிதம் குறித்து சார்ட் மற்றும் கற்றல் உபகரணங்களை தயார் செய்ய வைத்து, அதனை வகுப்பறைகள் முழுவதும் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தால், அவர்கள் வகுப்பறை விட்டு வெளியே செல்லக்கூடாது, ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்ற நோக்கில் வகுப்பறை முழுவதும், ஒவ்வொரு சூத்திரங்கள், அட்டவணைகள், வாய்ப்பாடுகள் போன்ற அனைத்துக்கும் ஒவ்வொரு விதமான மின்விளக்குகளை பொருத்தி, மாணவர்களை கவரும் வகையில் கணித ஆசிரியர் பாரதி அமைத்துள்ளார்.
ஓய்வு நேரத்திலும் படிக்கும் எண்ணம்
இதனால் வகுப்பறைக்குள் நுழைகின்ற மாணவர்கள் பாடத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் வகையில், மிகுந்த ஆர்வத்தோடு இருந்து வருகின்றனர். அதேபோல் மற்ற வகுப்பு மாணவர்கள் கூட, இந்த வகுப்பறைக்குள் வர வேண்டும், அமர வேண்டும், படிக்க வேண்டும் என்று எண்ணம் உருவாகி ஆர்வத்தோடு வகுப்பறைக்குள் வந்து, கண்காட்சிகளை போல் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
அதேபோல் மாணவர்கள் ஓய்வு நேரங்களில் அமர்ந்திருந்தால் கூட, பள்ளி கட்டிடத்தை பார்க்கின்றபொழுது அதில் அவர்களுக்கு பயனுள்ள வகையில் வாய்ப்பாடுகள், சூத்திரங்கள் என எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே மாணவர்கள் அமர்ந்து படிக்கவும், மதிய உணவு உண்ணும் வகையில் இரண்டு கட்டிடங்களையும் இணைத்து மேற்கூரையை அமைத்துக் கொடுத்துள்ளார்.
இதனால் மழை, வெயில், எந்த நேரங்களிலும் மாணவர்கள் அமர்ந்து படிப்பதும், உணவு அருந்துவதற்கும் வசதியாக இருந்து வருகிறது. அதேபோல் பள்ளியில் கழிவறை ஒன்று மட்டுமே இருப்பதால், மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும் நிலை இருந்து வந்த நிலையில், கூடுதலாக கழிப்பறை வேண்டும் என அரசுக்கு கோப்புகளை அனுப்பி வைத்துள்ளனர்.
மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் செலவில் கழிப்பறை வசதி
ஆனாலும் அரசு வழங்குவதற்குள் தனது சொந்த பணத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் ஆசிரியர் வழங்கினார். இந்த கழிப்பறையில் ஓவியங்களை வரைந்தும், சோப்பு, சீப்பு, பவுடர், ஹேண்ட் வாஷ் கிரீம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களையும் வைத்து, மாணவர்களை அதை பயன்படுத்தும் பழக்கப்படுத்தி உள்ளார். மேலும் இந்த கழிப்பறைகளை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்காக தனியாக பணியாளரை வைத்து தனது சொந்த செலவில் மாதம் ஊதியம் கொடுத்து வருகிறார்.
மேலும் தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளியின் தரத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக, தனது சொந்த செலவில் ரூ.40,000 மதிப்பில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சீருடை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதனால் ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்டு அங்குள்ள பழங்குடியின மக்கள் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு சேர்த்துள்ளனர். சுமார் 30க்கும் மேற்பட்ட பிள்ளைகள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு வந்து சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்த ஆசிரியர்கள் கூட்டு முயற்சியில் போதைகாடு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது, பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விகிதமும் அதிகரித்துள்ளது. இதனால் இந்த பள்ளி உள்ள மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரிக்கை
மேலும் இந்த பள்ளியை விட்டு ஆசிரியரும் இடமாறக்கூடாது, மாணவர்களும் 12-ஆம் வகுப்பு வரை இதே பள்ளியில் பாரதி ஆசிரியருடனே படிக்க வேண்டும் என்ற நோக்கில், எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளியை பனிரெண்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்தி கொடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஸ்மார்ட் கிளாஸ் நடத்தும்போது மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டால், பள்ளி மாணவர்களுக்கான வகுப்பு பாதிக்கப்படும் என்பதற்காக, ஆசிரியர்கள் இணைந்து ரூ.50,000 செலவு செய்து சோலார் அமைத்து அதிலிருந்து மின்சாரத்தை எடுத்து 24 மணி நேரமும் பள்ளியில் மின்சார வசதியை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல் வகுப்பறைகளில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அதில் தலைமை ஆசிரியர் தன் செல்போனில் வைத்து இணையதளம் வழியாக பள்ளியை கண்காணித்து வருகிறார்.
ஆசிரியர்களும் உண்ணும் உணவு
மேலும் பள்ளிக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், ஆசிரியர்கள் அரசு வழங்குகின்ற பொருட்களோடு கூடுதலாக காய்கறிகளை வாங்கி கொடுத்து, ஆசிரியர்களும், மாணவர்களோடு சத்துணைவையே உண்டு வருகின்றனர். மேலும் தேவையான காய்கறிகளை தினம்தோறும் ஆசிரியர்கள் வாங்கி வருகின்றனர். அதனை வைப்பதற்காக அந்த பள்ளியின் பட்டதாரி கணித ஆசிரியர் பாரதி தனது மகன் பிறந்தநாளை ஒட்டி, பள்ளிக்கு குளிர்சாதன பெட்டியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அதில் இந்த காய்கறிகளை வைத்து தினந்தோறும் காலை மற்றும் மதிய உணவிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சத்துணவிலேயே மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர்களும் உண்டு வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இவற்றால், ஏராளமான தனியார் பள்ளி மாணவர்களும் அரசு பள்ளியை விரும்பி வருகின்றனர்.