திமுக அரசு தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தாமதிப்பதாகக் கூறி போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக ஏராளமான ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை அறிவித்து வருகின்றன.


முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இயக்ககங்களின் ஆய்வுக் கூட்டம் நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆசிரியர்களின் நிதி சாராத கோரிக்கைகளை மட்டும் ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன. 


அந்த வகையில், தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சில தீர்மானங்களை தன் கூட்டத்தில் நிறைவேற்றி உள்ளது.


தீர்மானம்‌ - 1


நாங்கள்‌ ஆட்சிக்கு வந்த உடனேயே, ஆசிரியா்‌ - அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்‌ திட்டத்தை மீண்டும்‌ அமல்படுத்துவோம்‌ என்றும்‌, பேரறிஞர்‌ அண்ணா ஆசிரியாகளுக்கு வழங்கி இருந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியத்தை எவ்வித மாற்றமும்‌ இல்லாமல்‌ அப்படியே வழங்குவோம்‌ என்றும்‌ ஈட்டிய விடுப்பை ஆண்டுதோறும்‌ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசிடம்‌ ஒப்படைத்து ஊதியம்‌ பெற்றுவந்த உரிமையை மீண்டும்‌ அமல்படுத்துவோம்‌ என்றும்‌ உறுதிபடக்‌ கூறி ஆட்சி அமைத்த முதல்வர்‌ ஸ்டாலின்‌ ஆட்சிக்கு வந்து 43 மாதங்கள்‌ ஆன பிறகும்‌ ஆசிரியர்களுக்கும்‌ - அரசு ஊழியர்களுக்கும்‌ கொடுத்த வாக்குறுதிகளில்‌ இன்றுவரை ஒன்றைக்‌கூட நிறைவேற்றாத தமிழக அரசின்‌ அலட்சியப்போக்கை,  இப்பொதுக்குழு மிகவும்‌ வன்மையாகக்‌ கண்டிக்கிறது.


இந்தப் போக்கை இன்றைய அரசு தொடர்ந்து கடைபிடிக்குமேயானால்‌ - கடந்த ஆட்சிக்‌ காலங்களில்‌ நடத்திய போராட்டங்களை விட மிகத்‌ தீவிரமான தொடர்‌ போராட்டங்களை நடத்துவோம்‌. மறியல்‌ போராட்டம்‌, முக்கிய அரசு அலுவலகங்களில்‌, இரவு பகலாக காத்திருக்கும்‌ போராட்டம்‌, வேலை நிறுத்தப்‌ போராட்டம்‌, கோட்டை முற்றுகைப்‌ போராட்டம்‌ ஆகியவற்றை தோழமைச்‌ சங்கங்களுடன்‌ இணைந்து நடத்துவதென இப்பொதுக்குழு ஒருமனதாக தீர்மானிக்கிறது.


தீர்மானம்‌ - 2


அரசுப்‌ பள்ளிகளிலும்‌, அரசு உதவிபெறும்‌ பள்ளிகளிலும்‌ மாணவர்களுக்கு மிகச்சிறப்பான கற்பித்தல்‌ பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கற்பித்தல்‌ பணியைச் செய்யவிடாமல்‌, இதுவரை இருந்த எந்த அரசும்‌ சுமத்தாத மிகக்‌ கடுமையான வேலைப்‌ பளுவை அவர்கள்‌ மீது சுமத்தி மாணவச்‌ செல்வங்களின்‌ கற்றல்‌ பணிக்கு தொடர்ந்து இடையூறு செய்துவரும்‌ பள்ளிக்கல்வித்‌ துறையையும்‌, தமிழக அரசையும்‌ இப்பொதுக்குழு வன்மையாகக்‌ கண்டிக்கிறது.


கற்பித்தல்‌ பணியைச்‌ சாராத சுமார்‌ 15க்கும்‌ மேற்பட்ட பிற பணிகளை அதாவது மாணவர்கள்‌ மற்றும்‌ அவரது குடும்பங்களைச்‌ சோந்தவர்களின்‌ அனைத்து புள்ளி விவரங்களையும்‌ சேகரித்தல்‌,


பள்ளிக்கு வராத மாணவன்‌ வீட்டிற்குச்‌ சென்று, அம்மாணவன்‌ ஏன்‌ பள்ளிக்கு வரவில்லை; இப்பொழுது அவன்‌ எங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான்‌ ஆகிய புள்ளிவிபரங்களைச்‌ சேகரித்தல்‌, மாணவர்களுக்கு பஸ்‌ பாஸ்‌ பெற்றுத்‌ தருதல்‌, ஸ்காலர்சிப்‌ பெற்றுத் தருதல்‌, வங்கிக்‌ கணக்கு தொடங்குதல்‌, சாதிச்சான்று, வருமானச்சான்று, ஆதார்‌ அட்டை பெற்றுத் தருதல்‌,


மாணவர்களின்‌ சீருடை மற்றும்‌ காலனி ஆகியவைகளுக்கு அளவெடுத்தல்‌, இலவசப்‌ புத்தகங்களைப்‌ பெற்று தருதல்‌; கலைத்திருவிழாக்களை பள்ளியிலும்‌, ஒன்றிய அளவிலும்‌, மாவட்ட அளவிலும்‌ நடத்துவது - மேற்கூறிய அனைத்துப்‌ பணிகளையும்‌ அவ்வப்போது, உடனுக்குடன்‌ EMIS - இல்‌ பதிவேற்றம்‌ செய்து, மேல்‌ அதிகாரிகளுக்கு அனுப்புதல்‌ உள்ளிட்ட இன்னும்‌ ஏராளமான பணிகளை இந்த அரசு சுமத்தி வருவதால்‌, ஆசிரியர்கள்‌ ஓய்வின்றி பணிபுரிந்து வருவதால்‌, மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு, தினமும்‌ இரத்தக்‌ கண்ணீர்‌ வடித்து வருகிறார்கள். இந்த ஆட்சியில்‌, ஆசிரியர்கள்‌ பள்ளி விவரங்களை சேகரித்துக்‌ கொடுக்கும்‌- இளநிலை உதவியாளர்களாக மாற்றப்பட்டுவிட்டனார்‌ என்பதை மிகுந்த கவலையுடன்‌, தமிழக அரசுக்கும்‌ அதன்‌ பள்ளிக்கல்வித்‌ துறைக்கும்‌ இப்பொதுக்குழு தெரிவித்துக்‌கொள்கிறது.


கற்பித்தல் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும்


ஆகவே மேற்கூறிய பணிகளில்‌ இருந்து, ஆசிரியர்களை முழுமையாக விடுவித்து, அவர்களை கற்றல்‌ - கற்பித்தல்‌ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்திட வேண்டும்‌ என்று பள்ளிக்கல்வித்‌ துறையையும்‌, தமிழக அரசையும்‌ இப்பொழுதுக்குழு வற்புறுத்துகிறது.


இந்த நியாயமான எங்களுடைய கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால்‌ - அனைத்து தோழமை சங்கங்களுடன்‌ இணைந்து பள்ளிகளில்‌ உள்ளிருப்பு, காத்திருப்பு போராட்டம்‌ நடத்த வேண்டிய அவசியம்‌ ஏற்படும்‌ என்பதையும்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறைக்கும்‌, தமிழக அரசுக்கும்‌ சுட்டிக்காட்ட விரும்புகிறோம்‌.


தீர்மானம்‌ - 3


சமீக காலமாக, பள்ளிக் கல்வித்துறைக்கு சிறிதும்‌ சம்பந்தமில்லாதவர்கள்‌ எல்லாம்‌ பள்ளியை பார்வையிடுகிறோம்‌ என்ற போர்வையில்‌, பள்ளிக்கு வருவது; வகுப்பறைக்குச்‌ சென்று பாடம்‌ நடத்து என்று ஆசிரியர்களுக்கு கட்டளை இடுவது; ஆசிரியரின்‌ பாடக்குறிப்பேடுகளை காட்டு என்று சொல்வது, மாணவர்களை அவரே கேள்வி கேட்பது; அதற்கு மாணவர்‌ சரியான விடையைச்‌ சொல்லவில்லை என்றால்‌ - அந்த ஆசிரியரைப்‌ பார்த்து, நீ கட்டாய ஓய்வு பெற்று வீட்டுக்கு செல்ல வேண்டியதுதானே என்று ஆசிரியர்களை கேவலமாக மாணவர்கள்‌ முன்னிலையிலேயே பேசுவது - ஆகிய அநாகரீகச்‌ செயல்கள்‌ இன்று பள்ளிக் கல்வித்‌ துறையில்‌ அரங்கேற்றம்‌ செய்யப்படுகின்றன. இத்தகைய அரங்கேற்ற செயல்களில்‌ தற்போது மாவட்ட ஆட்சித்‌ தலைவர்கள்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌ என்பதை மிகுந்த கவலையுடன்‌ இப்பொதுக்குழு அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறது.


பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ - ஆசிரியாகளின்‌ பணிகளைப்‌ பார்வையிட்டு - நிறை குறைகளைச்‌ சொல்லுவதற்கு ஏராளமான உயர்‌ அதிகாரிகள்‌ இருக்கும்போது, மேற்கூறிய பணிகளில்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்கள்‌ தலையிடுவதை ஒருபோதும்‌ ஏற்க முடியாது. இத்தகைய செயல்களில்‌ ஈடுபடுவதை உடனடியாக மாவட்ட ஆட்சித்‌ தலைவர்கள்‌ நிறுத்திக்‌ கொள்ள வேண்டும்‌ என்று பொதுக்குழு வற்புறுத்துகிறது.


தீர்மானம்‌ - 4


ஆசிரியர்கள்‌ பெறும்‌ எம்.பில் உள்ளிட்ட உயர்கல்வித்‌ தகுதிகளுக்கு, ஊக்க ஊதியம்‌ முழுக்க முழுக்க அரசு ஆணைகளின்‌ அடிப்படையில்தான்‌ இதுநாள்‌ வரை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


10 ஆண்டுக்காலம்‌ பணிமுடித்த ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை வழங்கப்படும்‌ காலகட்டத்தில்‌தான்‌ அவர்‌ எம்.பில். உயர்கல்விக்கு பெறற ஊக்க ஊதியத்தை திருப்பிச்‌ செலுத்தினால்‌தான்‌ தேர்வுநிலை வழங்கப்படும்‌ - என்ற தவறான ஆயுதத்தை தற்போது கல்வி அதிகாரிகள்‌ கையில்‌ எடுத்து, ஆசிரியாகளுக்கு அந்தி இழைத்து வருகின்றனர்‌.


ஒருசில ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ள தணிக்கைத்‌ தடையை அனைத்து ஆசிரியா்களுக்கும்‌ பொதுமைப்‌ படுத்துவதை ஒருபோதும்‌ அனுமதிக்க முடியாது. ஆகவே தணிக்கைத்‌ தடை ஏதும்‌ இல்லாத ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய - தேர்வுநிலை உடனடியாக வழங்கிட உரிய ஆணைகளை விரைந்து வழங்கிட வேண்டும்‌ என்று பள்ளிக்கல்வி இயக்குநரை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.


தீர்மானம்‌ - 5


தணிக்கைக்குழு ஏற்படுத்தும்‌ தடையில்‌ கூட நம்பகத்தன்மை முழுமையாக இல்லை என்பதையும்‌ இப்பொதுக்குழு இயக்குநரின்‌ மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறது. ஒரு ஆசிரியருக்கு ஒரு பல்கலைக்கழகம்‌ வழங்கிய M.Phil உயர்கல்வித்‌ தகுதிக்கு பெற்ற ஊக்க ஊதியத்தை சரி என்று அனுமதிக்கும்  தணிக்கைக்குழு வேறு ஒரு பள்ளியில்‌ ஒரு ஆசிரியா்‌ அதே பல்கலைக்கழகத்தில்‌ பெற்ற அதே M.Phil உயர்‌ கல்விக்கு பெற்ற ஊக்க ஊதியத்திற்கு தணிக்கைத்‌ தடையை ஏற்படுத்தும்‌ தணிக்கைக்குழு - அரசாணைகளின்‌ அடிப்படையில்‌ செய்கிறதா ? அலலது வேறு எந்த காரணங்களின்‌ அடிப்படையில்‌ செய்கிறதா ? என்ற சந்தேகம்‌ ஆசிரியர்கள்‌ மத்தியில்‌ எழ தொடங்கிவிட்டன.


ஆகவே இது தொடர்பாக மிகத்‌ தெளிவான விளக்கங்களை - அரசு ஆணைகளின்‌ அடிப்படையில்‌ பள்ளிக்கல்வி இயக்குநர்‌ அவர்கள்‌ விரைந்து வெளியிட வேண்டும்‌ அதுவரை - 10 ஆண்டுகள்‌ பணி நிறைவு செய்தவர்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும்‌ - தேர்வுநிலை வழங்குவதை நிறுத்தி வைக்கக்‌ கூடாது.


இவ்வாறு தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் வாசிக்கலாம்: Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!