கால்நடை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூன் 3ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
எங்கெங்கே எந்தெந்த கல்லூரிகள்?
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் - கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம் - கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லாரி மற்றும் அராய்ச்சி நிலையங்களில் ஐந்தரை ஆண்டுகள் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல பிவிஎஸ்ஸி & ஏஎச் (BVSc & AH) படிப்புகள் மொத்தம் ஐந்தரை ஆண்டுகளுக்குப் படிக்கப்பட்டு வருகின்றன. நான்கரை ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு உள்ளுறைப் பயிற்சி அவசியம் ஆகும்.
B.Tech. - Food Technology
உணவுத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பு (பி.டெக். பயோடெக்னாலஜி) படிப்பு, சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கு 4 ஆண்டுகள் அவகாசம் ஆகும்.
BTech – Poultry Technology
கோழியின தொழில்நுட்பப் பட்டப் படிப்பு, ஓசுர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கற்பிக்கப்படுகின்றது. இந்தப் படிப்பும் மொத்தம் 4 ஆண்டுகளுக்குக் கற்பிக்கப்படுகின்றது.
BTech – Dairy Technology
பால்வளத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பு (பி.டெக்.டய்ரி டெக்னாலஜி) படிப்பு, சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்புக்கு 4 ஆண்டுகள் அவகாசம் ஆகும். எனினும் முந்தைய படிப்புகளைக் காட்டிலும் குறைவான இடங்களே ஒதுக்கப்படுகின்றன.
இதற்கிடையே பி.வி.எஸ்சி. & ஏ.எச். மற்றும் பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம் / கோழியினத் தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) B.V.Sc. & A.H. and B.Tech. (Food Technology/ Poultry Technology/ Dairy Technology) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர ஜூன் 3ஆம் தேதி காலை 10 மணி முதல் 21ஆம் தேதி 5 மணி வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாணவர் சேர்க்கை எப்படி?
மருத்துவப் படிப்புகளைப் போல இதற்கு நீட் தேர்வு அவசியம் கிடையாது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
தரவரிசைப் பட்டியல்
ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு முடிந்த பிறகு, தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைமுறைகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளன. தொடர்ந்து கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.