சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை கால்நடைத் துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்துள்ளார்.


சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பல்வேறு இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி, முதுநிலைப் பட்டயப் படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை வழங்கி வருகிறது. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் 9 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக 9 இளநிலைப் படிப்புகள், 29 முதுநிலைப் படிப்புகள், 23 வகையான ஆராய்ச்சிப் படிப்புகள், 25 முதுநிலைப் பட்டயப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.


இந்த பல்கலைக்கழகத்தின் 23ஆவது பட்டமளிப்பு விழா இன்று (மார்ச் 13) நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை வேந்தர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 1,166 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினர். 


இந்த பட்டமளிப்பு விழாவில் 522 மாணவிகள், 644 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். அதில் 955 மாணவர்கள் நேரடியாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து பட்டங்களை பெற்றனர். இந்த விழாவில் 43 மாணவிகள் மற்றும் 64 மாணவர்கள் என மொத்தம் 113 பேர் முனைவர் பட்டம் பெற்றனர்.


பட்டமளிப்பு விழா தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவில்லை.



என்ன காரணம்?


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி மார்ச் 8ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து துணை வேந்தர் பதவியை மேலும் ஓர் ஆண்டு நீட்டித்து சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதை அடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விழாவைப் புறக்கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


ஆளுநர்- மாநில அரசு மோதல்


ஆளும் மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசுகள் செயல்படும் நிலையில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுவது அரசியலில் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இதற்கிடையே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் கட்சியான திமுகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானமே கொண்டு வந்தார். இருந்தாலும், ஆளுநர் தொடர்ந்து சமூக நிதி, சாதியப் பாகுபாடு, திராவிட மாடல், சனாதனம் உள்ளிட்ட பல விவகாரங்களில் தமிழக அரசை தொடர்ந்து  விமர்சித்து வருகிறார்.


அதேபோல டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் டிஜிபியும் ஐபிஎஸ்ஸுமான சைலேந்திர பாபுவை நியமித்து, ஒப்புதலுக்கான கோப்பை தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியது. எனினும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. 


இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாக்களை பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.