மே 10 முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என பாரதியார் பல்கலை கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பாரதியார் பல்கலை கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில், “மே 10 முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். இளநிலை,முதுகலை படிப்புகளுக்கான அரியர் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்” என்று கூறியுள்ளது.
முன்னதாக, கொரோனா முதல் அலை பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் பின்னர் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா 2 வது அலை வேகமாக பரவிய நிலையில் கல்லூரிகளை மூடி ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்த அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் பாரதியார் பல்கலை கழகம் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா பேரலை வேகமெடுத்து வரும் சூழலில் கல்லூரிகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை என்பதால் வழக்கமான நடைமுறைகளை ஆன்மூலம் மேற்கொள்ள பல்கலைகழகங்கள் முடிவு செய்துள்ளன. அதன் படி, செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த பாரதியார் பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு முறையக வெளியாகியிருக்கும் நிலையில், அங்கு பயிலும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். இதே முறையே பிற கல்லூரிகளிலும் பின்பற்ற வாய்ப்புள்ளது.