மாணவர்களுக்கான ஆதார் அட்டை வழங்கும் முகாம் இன்று முதல் பள்ளிகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கு ஆதார் என்பது அவசியமாகியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள வரை ஆதார் பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மாணவ, மாணவிகள் அரசு திட்டம் மூலம் கிடைக்கும் உதவித்தொகை ஆகியவை நேரடியாக பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் வங்கி கணக்கு தொடங்குவதற்கும் ஆதார் தேவை என்பதால் பள்ளிகளில் ஆதார் முகாம்கள் இன்று நடைபெறுகிறது.


வழக்கமாக புதிதாக ஆதார் அட்டை விண்ணப்பம், ஆதாரில் திருத்தங்கள் ஆகியவை இ சேவை மையத்தில் மேற்கொள்ளப்படும். ஆனால் தற்போது மாணவர்களுக்காக பிரத்யேகமாக பள்ளிகளில் இதற்கான முகாம்கள் அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.


தமிழ்நாட்டில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகள் மட்டுமின்றி அரசி உதவிபெறும், தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை, வருகைப் பதிவு எமிஸ் தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன.


எமிஸ் தளத்தில் மாணவர்களின் விவரங்கள் அதாவது பெற்றோர் பெயர், தொலைப்பேசி எண், முகவரி, ஆதார் எண் ஆகியவை பதிவேற்றம் செய்யப்படும். ஆனால் இதில் பெரும்பாலான மாணவர்களுக்கு ஆதார் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. வங்கி கணக்கு தொடங்க ஆதார் அவசியமாகிவிட்டது.


இதனால் மாணவர்கள் எந்த சிரமமும் இன்றி ஆதார் அட்டையை பெற பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். இந்த முகாம்களை பள்ளிகளிலேயே நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோவையில் இன்று தொடங்கி வைக்கிறார். ஆதார் பதிவு, ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு நோக்கத்திற்காக எந்த குழந்தையும் பள்ளியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அப்படி வெளியே அனுப்பவும் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.