தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார், பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யும் தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டால்தான் காலமுறை சம்பளம், அரசு சலுகைகள் மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என்பதால், இது குறித்து முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பல ஆண்டு காத்திருப்பு
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 52 மாதமாகியும் இதுவரை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்றார்கள். அடுத்த 2026 சட்டமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வருவதற்குள் முதல்வர் ஸ்டாலின் இதை செய்து முடிக்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது 10 ஆண்டாக திமுக வைத்த கோரிக்கையைதான் தேர்தல் வாக்குறுதியாகவும் கொடுத்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டாக காக்க வைக்கலாமா? என பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றர்கள். இதனால் 15 ஆண்டாக தற்காலிக வேலையில் பணிபுரிந்து வருகின்ற 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போதும் 12,500 ரூபாய் குறைந்த சம்பளம் வழங்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிப்படைந்து வருகிறது.
வாழ்வாதாரத்திற்காக சிரமப்படும் ஆசிரியர்
விலைவாசி உயர்வில் இதை வைத்து சாப்பாட்டு செலவு, மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மின் கட்டணம் உள்பட அடிப்படை தேவைகளுக்கு கடன் வாங்கி சிரமப்படுகின்றர்கள். மே மாதம் சம்பளம், மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, மரணம் அடைந்தால் நிவாரணம் உள்பட எதுவுமே கிடையாது என்பதால் இனி பணி நிரந்தரம் மட்டுமே முழு தீர்வாக இருக்கும் என பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள்.
எனவே இந்த நீண்ட கால பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் காலமுறை சம்பளம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும். இது திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் தெரிவித்து உள்ளதால் அதனை அரசாணையாக்கி அரசு கொள்கை முடிவாக அறிவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
ஒருபக்கம் எதிர்கட்சிகள் திமுக தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், பகுதிநேர ஆசிரியர்களும் தங்களை திமுக தேர்தல் வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகின்றார்கள். இன்னும் ஒரு சில மாதங்களே ஆட்சி அதிகாரம் முதல்வர் கையில் இருப்பதால் அதற்குள் போர்க்கால அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருவதாக அவர் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.