ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக, காசாவில் அல்லல்படும் மக்களின் பெயரைச் சொல்லி, குஜராத்திற்கு வந்து நிதி திரட்டிய சிரியாவைச் சேர்ந்த மோசடிப் பேர்வழியை காவல்துறையினர் கைது செய்து, தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
காசா மக்கள் பெயரில் நிதி திரட்டி மோசடி
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பேர் நடைபெற்று வரும் நிலையில், அந்த போரினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும், ஏராளமானோர் உடைமைகளை இழந்து, தற்போது உணவுக்கே வழியில்லாமல் அல்லல்பட்டு வருகின்றனர்.
காசாவில் பஞ்சம் நிலவுவதாக நேற்று ஐ.நா சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படிப்பட்ட சூழலில், போரில் ப்திக்கப்பட்ட காசா மக்களுக்காக நிதி திரட்டுவதாகக் கூறி, குஜராத் மாநிலத்தில் உள்ள மசூதிகளுக்குச் சென்று சிலர் நிதி திரட்டுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிரியாவைச் சேர்ந்த ஒரு கும்பல், காசா மக்களுக்காக நிதி திரட்டுவதாகக் கூறி, மோசடி வேலையில் ஈடுபட்டு வந்ததை கண்டுபிடித்தனர்.
ஒருவர் கைது; 3 பேரை தேடும் காவல்துறையினர்
இதையடுத்து ஆக்ஷனில் இறங்கிய அகமதாபாத் குற்றப்பிரிவு அதிகாரிகள், அந்த மோசடி கும்பலைச் சேர்நத் அலி மெகாத் அல் அசார் என்பவரை அதிரடியாகச் சென்று கைது செய்தனர். அந்த நபருடன் இருந்த மேலும் 3 பேர் தப்பி ஓடிய நிலையில், அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விசாரணையில், இவர்கள் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கைதான நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டு, இங்கு வந்து மோசடியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், இதற்கான நோக்கத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாகவும், அகமதாபாத் குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காசா மக்களுக்கு வரும் உணவை தடுக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதல்களினால், காசாவில் ஏராளமானோர் உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, மனிதாபிமான அடிப்படையில், செஞ்சிலுவைச் சங்கம் எள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் அவர்களுக்கு எடுத்துவரப்படும் உணவுப் பொருட்களையும் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இதனால், காசாவில் பட்டினியால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, காசாவில் பஞ்சம் நிலவுவதாக நேற்று ஐ.நா சபை அறிவித்தது.
இப்படிப்பட்ட சூழலில், மனிதாபிமானமே இல்லாத இதுபோன்ற நபர்கள், அவர்களை பெயரை வைத்து மோசடியில் ஈடுபடுவது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.