தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆக.19ஆம் தேதி வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050  இடங்கள்,ஒரு இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 150 இடங்கள், 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3400 இடங்கள்,மூன்று மாநில தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் 450 இடங்கள் என மொத்தம் தமிழ்நாட்டின் 9050 மருத்துவ இடங்கள் உள்ளன. அதேபோல்  பிடிஎஸ் பல் மருத்துவப் படிப்பில் மூன்று அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும் 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1950 இடங்களும் ஆக மொத்தம் 2200 இடங்கள் உள்ளன


இவற்றுள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எம்பிபிஎஸ்படிப்பில் 851 இடங்களும் பிடிஎஸ் படிப்பில் 38 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.


ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் மாநிலக் கலந்தாய்வு


இதற்கிடையே இந்திய அளவில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ம் தேதி தொடங்கும் என்று மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்து இருந்தது. முதல் சுற்றுக் கலந்தாய்வு  ஆக.14 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் பிறகு ஒரு வாரம் கழித்து, ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் மாநிலக் கலந்தாய்வு தொடங்குகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 சதவீத இடங்கள் நிரப்பப்பட்ட பிறகு, மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில அளவிலான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. 


எனினும் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவகள் முதலில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். இந்த விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


சிறப்பு  இட ஒதுக்கீடு, 7.5% இட ஒதுக்கீடு தொடர்பான விவரம்


அரசுப் பள்ளி மாணவர்கள், விளையாட்டு மாணவர்கள். மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு, ஆக.22 மற்றும் 23ஆம் தேதி நடைபெறும்


 இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்கள் சேர்க்கை எதுவும் இல்லை. 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன.


அக். 1 முதல் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கம்


இந்த ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


இதையும் வாசிக்கலாம்: MBBS Admission: மாணவர்களே… இன்று முதல் ஆக.8 வரை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்- எப்படி?


கலந்தாய்வு குறித்த சந்தேகங்களுக்கு: 044 – 28361674 / 044 – 28363822 / 044 - 28364822 / 044 – 28365822 / 044 – 28366822 / 044 – 28367822 / 044 – 29862045 / 044 – 29862046


கூடுதல் தகவல்களுக்கு: www.tnmedicalselection.nettnhealth.tn.gov.in