தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம், 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

இந்தத் திட்டம் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடந்த சமூக நலன், மகளிர் நலத்துறை அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், 15.09.2022 அன்று மதுரை அரசுப் பள்ளியில் (CMBFS) வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் நீட்சியாக தவெக அரசில் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 

Continues below advertisement

எதற்காக இந்தத் திட்டம்?

மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதையும் வாசிக்கலாம்: NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?

அரசு கூறியது என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்  தலைமையில் இன்று (15.06.2026) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின்கீழ் செயல்பட்டுவரும் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆகிய துறைகளின் மூலம் குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோரது நலனிற்காகச் செயல்படுத்தப்பட்டுவரும் இல்லங்கள், பல்வேறு திட்டங்கள், சமூக சட்டங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

"வெற்றித் தமிழகம்" தொலைநோக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள துறை சார்பாக செயல்படுத்தக்கூடிய திட்டங்கள், அதற்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த சேவை மையம்

மேலும், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) செயல்பாடுகள், தத்தெடுக்கும் மையங்கள், மகளிர், குழந்தைகள், மூத்தகுடிமக்கள் ஆகியோருக்காக செயல்படுத்தப்படும் உதவி எண்கள், குழந்தைகளுக்கான காலை மற்றும் மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையச் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை, தொடர்புடைய பயனாளர்களான குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்தகுடிமக்களிடம் தடையின்றி மற்றும் துரிதமாகக் கொண்டு சேர்க்கவேண்டும் எனவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகாதபடி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மேற்படி பழக்கத்திற்கு ஆளான குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை' 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவாக்கம் செய்திட ஏதுவாக, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி இத்திட்டத்தினை முதற்கட்டமாக தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.