அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.


தரவரிசைப் பட்டியல்:


பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை கடந்த 13ம் தேதி காலை கிண்டி, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதைதொடர்ந்து வெளியான அற்விப்பின்படி,   பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. ஜூலை 28ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ளது.


முதல் நாள் கலந்தாய்வு:


முதற்கட்டமாக, இன்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. சிறப்பு பிரிவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விளையாட்டு பிரிவில் 226 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு 9 மாணவர்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 26 பேரும் தகுதி பெற்றுள்ளனர். விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகிய மூன்று பிரிவிலும் சேர்த்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு சிறப்பு பிரிவில் மொத்தம் 628 இடங்கள் உள்ளன. இதற்கு இணைய வழியில் கலந்தாய்வு நடைபெற உள்ளதால், மாணவர்கள் வீடுகளில் இருந்தும், அரசு அமைத்துள்ள மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலமாகவும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.


இன்றே ஆணை:


காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்யவும், அன்று இரவே தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட்டு, நாளை பிற்பகல் 3 மணிக்குள் அதனை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு உறுதி செய்பவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.


பொறியியல் கலந்தாய்வு:


நடப்பாண்டு ஆண்டு பொறியியல் படிப்புகளில் 1,57,378 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 3,100 இடங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. 11,804 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து படித்து, பொறியியல் கலந்தாய்வில் இடம்பெற உள்ளனர்.  அங்கீகாரம் பெற்ற 430 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையை நடத்த உள்ளன. 


சிறப்புப் பிரிவுக்கு 1, பொதுப் பிரிவுக்கு 2 என மொத்தம் 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலி இடங்கள் இருந்தால், அவற்றை நிரப்பக் கூடுதலாக ஒரு கலந்தாய்வு நடத்தப்படவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இணையதள வாயிலாக நடைபெறும் துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 


செப்டம்பர் 11ஆம் தேதி வரை கலந்தாய்வு 


அருந்ததியர்கள் பிரிவில் காலியாக உள்ள இடங்களை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மாற்றும் கலந்தாய்வு செப்டம்பர் 10, 11ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இறுதி நாள் கலந்தாய்வு செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது. 


பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு


சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சிறப்பு இடங்கள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்களுக்கான அசல்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு சென்னையில்‌ நேரடியாக நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.