தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 


தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியாகியிருந்தது. 


பொதுத்தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு ஆசிரியர்களும் மாதிரி தேர்வுகள் என அனைத்து மாணவர்களையும் தயார் செய்து வந்தனர். தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வை 4,03,156 மாணவர்களும், 4,33,436 மாணவிகளும் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 23,747 பேர் தனித்தேர்வர்கள் ஆவார்.  மாற்றுத் திறனாளிகள் 5,206 பேரும்,  மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும்,  சிறை கைதிகள் 90 பேரும் தேர்வு எழுதுகின்றனர். 


புதுச்சேரி:


இதேபோல் புதுச்சேரியில் 6,982 மாணவர்களும், 7,728 மாணவிகளும் என மொத்தம் 14, 728 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.மொத்தம் 3, 225 மையங்களில் பொதுத்தேர்வானது நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை கண்காணிப்பு பணிகளில் 46,870 ஆசிரியர்களும், முறைகேடுகளைத் தடுக்க 4,235 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  


ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டு செல்லவும், ஹால் டிக்கெட்டில் இடம் பெற்றுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?


இதேபோல் விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் தான் எழுத வேண்டும். கலர் பென்சில், பேனாக்களை உபயோகிக்கக்கூடாது. மேலும் விடைத்தாளில் ஏதேனும் குறியீடு, பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வர்களின் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள் முதன்மை விடைத்தாளுடன் இணைந்து வழங்கப்படும். அதனைச் சரிபார்த்து தேர்வர்கள் கையெழுத்து போட்டால் போதும். மேலும் அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 


இதனைத் தொடர்ந்து 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் 7,73,688 மாணவர்களும், புதுச்சேரியில் 14,376 மாணவர்களும் எழுதவுள்ளனர். இதில் மாற்றுத் திறனாளிகள் 5,835 பேர், மாற்றுத்திறனாளிகள் 4 பேர், சிறைக்கைதிகள் 125 பேர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.